ETV Bharat / city

சென்னையில் பெண் உள்பட ஐந்து கஞ்சா வியாபாரிகள் கைது

author img

By

Published : Jan 15, 2022, 6:25 AM IST

ஆந்திராவிற்குச் சென்று சென்னைக்கு தொடர் கஞ்சா விற்பனை செய்தவர்களை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்ததற்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் வெகுவாக பாராட்டியுள்ளார்.

கைது
கைது

சென்னை: மாநகரின் பல பகுதிகளில் அதிகளவில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதை அறிந்து அதனைக் கட்டுப்படுத்துமாறு காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.

காவல்துறை ஆணையாளரின் உத்தரவையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் மேற்பார்வையில் மூன்று தனிப்படை காவல்துறையினர் வண்ணாரப்பேட்டை முழுவதும் கஞ்சா விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிப்படை தீவிர விசாரணை

இந்நிலையில், ராயபுரம் உதவி ஆணையாளர் உக்கிரபாண்டியன் மற்றும் ஆய்வாளர் பூபாலன் ஆகியோரின் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் காவலர்கள் ராஜவேலு, சரவணன், செந்தில்குமார், இளங்கோ மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் காசி, கார்த்திக், அரவிந்த் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ராயபுரம், காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் கஞ்சா புழக்கம் குறித்து ரகசியமாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து ராயபுரத்திற்கு பெரிய அளவில் கஞ்சா கடத்தி வருவதற்குக் கஞ்சா கடத்தும் கும்பல் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக தனிப்படை காவல்துறை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு விரைந்து அங்கு ராஜமுந்திரி, துணி, அன்னவரம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து கஞ்சா வியாபாரிகள் சென்னைக்குக் கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

160 கிலோ கஞ்சா பறிமுதல்

இந்நிலையில், ஆந்திராவிலிருந்து மிகப்பெரிய அளவிலான கஞ்சாவைக் கும்பல் ஒன்று சென்னைக்குக் கடத்த இருப்பதைத் தனிப்படையினர் தெரிந்து கொண்டனர்.

உடனடியாக சென்னை விரைந்த தனிப்படை காவல்துறை ராயபுரம் ரயில்வே மேம்பால பகுதியில் ரகசியமாகச் சோதனை செய்து அங்குக் கஞ்சா உடன் இருந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரமணா(33), சத்யவதி(32) மற்றும் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த மூவேந்தன்(29), புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா(29), தண்டையார்பேட்டை விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(42) ஆகிய 5 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.32 லட்சம் மதிப்புள்ள 160 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

பெண் உட்பட 5 கஞ்சா விற்பனையாளர்கள் கைது

மேலும், இது தொடர்பாக நடத்த விசாரணையில், ரமணா மற்றும் சத்யாவதி ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவைக் கொண்டு வந்து ராயபுரம் ரயில்வே மேம்பால பகுதியில் வைத்து சென்னையில் வியாபாரம் செய்து வரும் மூவேந்தன், சூர்யா, சுப்பிரமணி ஆகியோர் இடம் கொடுக்க முயன்றபோது கைது செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதில் ராயபுரம் தனிப்படையினர் பழைய ரயில்வே மேம்பாலம் அருகே 160 கிலோ கஞ்சாவுடன் அங்கு இருந்த பெண் உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த ஐந்துபேர் மீதும் ஏற்கனவே, பல கஞ்சா வழக்குகள் நிலுவையிலிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை கஞ்சா விற்பனை தொடர்பாகத் தொடர்ந்து பிடிபட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரா - சென்னைக்கு தொடர் கஞ்சா விற்பனை

மேலும் இது குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவ பிரசாத் கூறியதாவது, வண்ணாரப்பேட்டை சரகத்தில் கஞ்சா பழக்கத்தைக் கட்டுப்படுத்த மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளோம்.

இதில் ரமணா மற்றும் சத்யாவதி ஆகியோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாரத்திற்கு இருமுறை ஆந்திராவிலிருந்து சென்னைக்குக் கஞ்சாவைக் கடத்தி வந்து சென்னையில் சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

ஆந்திராவிலிருந்து சென்னைக்குக் கஞ்சா கடத்தி வருவதை உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அவருடன் இருந்த தனிப்படை காவலர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நான்கு நாட்களுக்கு மேலாகத் தங்கியிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ராயபுரம் பகுதியில் கஞ்சா வியாபாரம் கும்பலை தற்போது கைது செய்துள்ளனர்.

காய்கறி வியாபாரிகளிடமும் விசாரணை

ஏற்கனவே, கடந்த வாரம் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 96 கிலோ கஞ்சாவுடன் ஒரு கும்பலைக் கைது செய்து இருந்தோம். கஞ்சா விற்பனை தடுப்பதற்காக வண்ணாரப்பேட்டை சரகத்தில் 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம்.

கஞ்சா புழக்கத்தின் அடிப்படையில் தனிப்படையினரைக் கஞ்சா புழக்கம் அதிகமுள்ள விசாகப்பட்டினம், நெல்லூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி சென்னையில் கஞ்சா புழக்கம் குறித்தும் மற்றும் சென்னை வியாபாரிகள் குறித்தும் அடிக்கடி விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம்

மேலும், கஞ்சா கடத்தி வருபவர்கள் கண்டெய்னர் லாரி மற்றும் காய்கறி லாரிகளில் கஞ்சாவைக் கடத்திக் கொண்டு வருவதால் காவல்துறை சுங்கச்சாவடிகளில் இருந்து தப்பித்து சென்னைக்குள் கஞ்சா கொண்டு வரப்படுகிறது.

துணை ஆணையாளரின் பாராட்டுகள்

இதில் பிடிபட்ட மூவேந்தன், சூர்யா சுப்பிரமணி ஆகியோர் ராயபுரம் காசிமேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்டோ டிரைவர்கள், மீனவர்கள் என அனைவருக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.

கடந்த முறை மாட்டிய கும்பலைச் சேர்ந்தவர்களும், இந்த முறை பிடிபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு குழுவாக உள்ளனர். கஞ்சா கடத்தலில் பல குழுக்கள் செயல்பட்டு வருவதால் அனைத்து குழுக்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சாவை வர வைத்து விற்பனை செய்த கும்பல்

மேலும் தனிப்படையில் சிறப்பாகப் பணியாற்றி 160 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து பெண் உட்பட ஐந்து பேரைக் கைது செய்த தனிப்படை காவல்துறையை வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் வெகுவாக பாராட்டினார்.


இதையும் படிங்க: பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.