ETV Bharat / city

அங்கே ஒன்றுதான், இங்கே ஆயிரம் இருக்கு - இயக்குனர் பேரரசு!

author img

By

Published : Apr 17, 2022, 2:00 PM IST

தற்போது வெளியாகி அனைத்து தரப்பிலும் எதிர் மாதிரியான கருத்துக்களை பெற்று வரும் புதிய படங்கள் குறித்த ரசிகர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அங்கே ஒன்றுதான் இங்கே ஆயிரம் இருக்கு - இயக்குனர் பேரரசு!
அங்கே ஒன்றுதான் இங்கே ஆயிரம் இருக்கு - இயக்குனர் பேரரசு!

சென்னை: தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கும் முன்னணி நடிகர் ஒருவரின் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்பதால் மற்ற மொழி பட நடிகரின் படத்துடன் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பேரரசு ரசிகர்களின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்மானத் தமிழா! கர்நாடகாவில் அங்கே உள்ள ஒரு உச்ச நட்சத்திரம் நடித்த திரைப்படம் வெளியாகி, அதே நேரத்தில் நம் தமிழ் நடிகர் நடித்த தமிழ்ப்படம் வெளியாகி கன்னடப்படம் தோல்வியடைந்து, நம் தமிழ்ப்படம் வெற்றியடைந்தால் அங்கே உள்ள கன்னடர்கள் கன்னடப்படத்தை இழிவுப்படுத்தி நம் தமிழ்ப்படத்தையும், நம் தமிழ் நடிகரையும் கொண்டாடுவார்களா?

தமிழ் படங்களுக்கு கன்னடர்கள் தடை: மேலும் இடையில் தமிழ்ப்படங்கள் அங்கே வெளியிடக்கூடாது என்று கன்னடர்கள் போராட்டங்கள் செய்தனர். கலவரம் விளைவித்தனர். அதுமட்டுமல்ல தமிழ்ப்படங்களைக் கன்னடத்தில் டப் செய்து வெளியிடக்கூடாது என்ற நிலையும் தற்பொழுது அங்கே உள்ளது. ஒரு தமிழ்ப் படம் வெளியாகி அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் அந்தப் படத்தைப் பற்றி மட்டும் விமர்சனத்தை வைக்கலாம் தவறில்லை.

ஆனால் அதேசமயம் ஒரு கன்னடப் படம் வெளியாகி வெற்றி அடைந்தால் பாராட்டுங்கள் ஒன்றுக்குப் பல முறை அப்படத்தைப் பாருங்கள் தவறில்லை. ஆனால் அந்தப்படத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடி, தமிழ் படத்தை இழிவுபடுத்துவதும், கன்னட படத்தோடு தமிழ்ப் படத்தை ஒப்பிட்டு தமிழ்ப் படத்தைத் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல. இங்கே நான் மொழி வெறுப்பை வெளிப்படுத்தவில்லை.

தமிழ் சினிமாவை தரக்குறைவாக பேசக்கூடாது!:அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது தான் திரைப்படம். இந்தியத் திரையுலகிலேயே அதிக மொழி மாற்றம் செய்யப்பட்டது தமிழ்ப் படங்கள்தான். இன்றும் இந்தியாவிலேயே தமிழ் சினிமா தலை நிமிர்ந்து நிற்கிறது. முன்னோடியாகவும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஓரிரு படங்கள் சரிவர வெற்றி அடையாததால் தமிழ் சினிமாவை யாரும் தரக்குறைவாகப் பேசி விடக்கூடாது, நினைத்து விடவும் கூடாது.

சமீபத்தில் ஓரிரு தெலுங்கு படங்களும் ஓரிரு கன்னட படங்களும் வெற்றி அடைந்ததால் தமிழ்த் திரை உலகம் பின் தங்கி விட்டதாகவும் தமிழ் இயக்குநர்கள் திறமையற்றவர்களாகவும் விமர்சனம் செய்வது தமிழனைத் தமிழன் அசிங்கப்படுத்துவதாகும். இது நம் தமிழ்மொழியின் கௌரவப் பிரச்சனை.

தமிழா நீ போற்றுவதற்கு ஒரு கன்னடப்படம்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் போற்றுவதற்கு இங்கு ஆயிரம் தமிழ்ப் படங்கள் இருக்கிறது என்பதை மறவாதே!கன்னட படம் நன்றாக இருந்தால் பார்ப்போம் போற்றுவோம்! ஆனால் அதோடு ஒப்பிட்டு தமிழ்ப் படத்தைத் தூற்றுவதைத் தவிர்ப்போம் ஒரு கன்னட நடிகரைப் பாராட்டுவோம் அதேசமயம் ஒரு தமிழ் நடிகரை,தமிழனைத் தரம் தாழ்த்தாதிருப்போம்! இது கலையையும் தாண்டி தமிழை இழிவு படுத்துவதாகும்.

தமிழ்நாட்டில் பல நடிகர்களுக்குப் பல ரசிகர்கள் இருக்கலாம் ஆனால் நாம் எல்லோரும் தமிழர்கள்.தமிழுக்கு ரசிகர்கள். தமிழ் ரசிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:KGF 2: 'ஃபேன் மேடு' எடிட்டரிலிருந்து 'பான் இந்தியா' எடிட்டரான 20 வயது இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.