ETV Bharat / city

கழிவுநீர்போல் காட்சியளிக்கும் மழைநீர்: திருநின்றவூரில் விஷப்பூச்சிகளால் அச்சம்!

author img

By

Published : Dec 8, 2021, 9:19 AM IST

Updated : Dec 8, 2021, 9:55 AM IST

ஆவடி அருகே திருநின்றவூரில் வீடுகளைச் சுற்றி தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றக் கோரி தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநின்றவூரில் விஷப்பூச்சிகளால் அச்சம்
திருநின்றவூரில் விஷப்பூச்சிகளால் அச்சம்

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆவடியில் மட்டும் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.

இதன் காரணமாக ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருநின்றவூர் பேரூராட்சி பெரியார் நகர்ப் பகுதியில் சுமார் 6 அடி அளவிற்கு குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்து மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கிருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ஒற்றைக் கோரிக்கை

சிலர் தங்களது உறவினர்கள் வீட்டிற்குச் சென்று தஞ்சமடைந்தனர். மழை நின்று ஒரு வாரம் கடந்த நிலையில் தற்போதுவரை இடுப்பளவு நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பெருமளவு அவதிப்பட்டுவரும் அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் தேங்கி நிற்கும் மழை நீரில் இறங்கி நேற்று (டிசம்பர் 7) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி வட்டாட்சியர், திருநின்றவூர் காவல் துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் இவர்களது பேச்சுவார்த்தைக்குப் பொதுமக்கள் இணங்கவில்லை.

'நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என ஒற்றை கோரிக்கையில் மட்டும் பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

விஷப்பூச்சிகள் ஆபத்து

தொடர்ந்து மழை வெள்ளம் தேங்கி நிற்கும் முக்கியக் காரணமான ஈஷா ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து ஈஷா ஏரியிலிருந்து நீர் வெளியேற்ற அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கழிவுநீர் போல் காட்சியளிக்கும் மழைநீர்
கழிவுநீர் போல் காட்சியளிக்கும் மழைநீர்

சுமார் இரண்டு வாரமாக குடியிருப்புப் பகுதியில் உள்ள மழைநீர் கழிவுநீர்போல் காட்சி அளிப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் இடர் இருப்பதாகவும், வீடுகளுக்குள் விஷப் பூச்சிகள் நுழைவதாகவும் வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள் உடனடியாகத் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற கோரிக்கைவிடுக்கின்றனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்: டிஜிபி உத்தரவு

Last Updated : Dec 8, 2021, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.