ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையம் - ஸ்டாலின் உத்தரவு

author img

By

Published : Jan 19, 2022, 3:03 PM IST

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டாலின் உத்தரவு
ஸ்டாலின் உத்தரவு

சென்னை: காவலர் - பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல் துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் முன்னாள் நீதியரசர் சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு, "தமிழ்நாடு காவல் துறையானது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளம், பொருளாதார வளர்ச்சி, அமைதியான சூழல், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளில் காவல் துறை தனது முயற்சியைத் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்துகொண்டிருக்கிறது.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் மேலும் சிறக்கப் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்திவருகின்றது.

காவலர்களின் நலன், காவலர் – பொதுமக்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்யும்பொருட்டு 1969, 1989, 2006ஆம் ஆண்டுகளில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, முறையே மூன்று காவல் ஆணையங்களை அமைத்து, அவற்றின் பரிந்துரைகளைப் பெற்று காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, திராவிட முன்னேற்றக் கழகம், தனது 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், 'மீண்டும் கழக அரசு அமைந்ததும், நான்காவது முறையாக காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, ஒரு காலவரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்' என வாக்குறுதி அளித்திருந்தது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்விதமாக, 2021 செப்டம்பர் 13 அன்று சட்டப்பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில், 'காவலர் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல் துறை பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் 'காவல் ஆணையம்' ஒன்று மீண்டும் அமைக்கப்படும்' என அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், புதிதாக காவல் ஆணையம் ஒன்றைத் தற்போது அமைத்திடவும், அந்தக் காவல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி. செல்வத்தை தலைவராகவும்,ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் கா. அலாவுதீன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் கே. இராதாகிருஷ்ணன், மனநல மருத்துவர் சி. இராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும்,

காவல் துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வாலை உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆணையம், காவலர்களின் நலன், காவல் துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வுசெய்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும். காவல் துறையின் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழிக் குற்றங்களைத் தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல் துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும், இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் அமைந்திடும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திரித்து முன்மொழியும் கட்டுக்கதைகளை நிறுத்துங்கள் - ஸ்டாலினுக்கு அண்ணாமலை அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.