ETV Bharat / city

மூடப்பட்ட குவாரிகளைத் திறக்க நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் தரக் கூடாது - பூவுலகின் நண்பர்கள்

author img

By

Published : Jul 13, 2022, 10:44 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலுக்காக மூடப்பட்ட கல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அழுத்தம் கொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மூடப்பட்ட குவாரிகளைத் திறக்க நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் தரக் கூடாது : பூவுலகின் நண்பர்கள்
மூடப்பட்ட குவாரிகளைத் திறக்க நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் தரக் கூடாது : பூவுலகின் நண்பர்கள்

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறலுக்காக மூடப்பட்ட கல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அழுத்தம் கொடுக்கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குவாரிகளை மூடினால் என்ன?: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உரிய விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த கல்குவாரியில் மே மாதம் நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 55 கல் குவாரிகளை ஆய்வு செய்வதற்கான குழுக்களை அமைத்தி்ருந்தார்.

அக்குழுக்கள் அண்மையில் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பித்த அறிக்கையின்படி, விதிமீறி செயல்பபட்டு வந்த 13 குவாரிகளை ஏன் மூடுவதற்கு உத்தரவிடக் கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியள்ளது, 41 குவாரிகளுக்கு அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தமாக 54 குவாரிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஜூலை 12 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுவட்டாரத்தில் ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் விளக்கம்: இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், கல் குவாரிகள் மூடப்பட்டதால் 50 ஆயிரம் பேர் வேலையிழந்ததற்கும் கற்களின் விலை ஏறியதற்கும் அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று செய்தியாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு,

“இதை முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு சென்றுவிட்டு, வேலையிழந்தவர்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் பதிலளித்தார். அமைச்சர் பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியரை இக்கேள்விக்கு பதிலளிக்குமாறு கூறினார். இந்தப் பிரச்சனை அரசின் பரிசீலனையில் உள்ளது என மாவட்ட ஆட்சியரும் பதிலளித்தார்.

ஆட்சியருக்கு அழுத்தம்: அப்போது திடீரென கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் “செய்தியாளரின் கேள்வி சரிதான், குவாரிகளை மூடி 60 நாள் ஆகிவிட்டது, எந்த முடிவும் இல்ல, அதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க” என்று மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசினார். உடனடியாக அமைச்சர் குறுக்கீடு செய்து நாடாளுமன்ற உறுப்பினரை அமைதிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டனத்திற்குரியதாகும். ஒரு மாவட்ட ஆட்சியர் தனக்கு அரசு வழங்கியிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி எந்தவித விருப்பு, வெறுப்புமின்றி சட்டவிரோதக் கல் குவாரிகள் மீது சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது பணியை மட்டுமே செய்துள்ளார்.

இப்படி இருக்கையில், பொதுவெளியில் அதிலும் குறிப்பாக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரை பதிலளிக்க கட்டாயப்படுத்தியதும், குவாரிகள் மூடலுக்கு மாவட்ட ஆட்சியர் பதவியில் தற்போது இருக்கும் குறிப்பிட்ட அதிகாரியை தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்கும் வகையில், அவருக்கு அழுத்தம் கொடுத்ததும் ஏற்கத்தக்கதல்ல.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விவகாரத்தைக் கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குவாரிகளை நிரந்தரமாக மூடுவதற்கும், நெல்லை மாவட்ட நிர்வாகம் அழுத்தங்கள் ஏதுமின்றி செயல்படுவதை உறுதி செய்யவும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உரிய உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 3 மணி நேரம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.