ETV Bharat / city

"இளம் ஐஏஎஸ்களுக்கு, பி.சபாநாயகம் ஒரு பல்கலைக்கழகம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Jun 12, 2022, 12:14 PM IST

தமிழ்நாடு அரசின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகத்தின் 100ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளம் ஐஏஎஸ்களுக்கு, பி.சபாநாயகம் ஒரு பல்கலைக்கழகமாக திகழ்கிறார் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் பெருமிதம்
ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலருமான பி.சபாநாயகத்தின் 100ஆவது பிறந்தநாள் விழா நேற்று (ஜூன்11) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பெருமதிப்பிற்குரிய சபாநாயகத்திற்கு 100ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் உடன் பணியாற்றியவரே நம்முடைய நூற்றாண்டு விழா காணக்கூடிய சபாநாயகம்.

ஆட்சிப் பணியில் தலைமைப் பண்பு: எம்ஜிஆரிடம் பணியாற்றி, 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றிருக்கக்கூடியவர். கருணாநிதி அரசில் 5 ஆண்டுகள் தலைமைச் செயலாளராக இருந்து, இந்த மாநிலத்தினுடைய ஆட்சிப் பணியை, சிறப்பாக எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் நடத்தியவர். இவர் தலைமைச் செயலாளராக மட்டுமல்ல, விஜிலென்ஸ் கமிஷனர்(Vigilance Commissioner), டெவலப்மென்ட் கமிஷனர்(Development Commissioner) ஆகிய பொறுப்புகளையும் பார்த்தவர். ஆட்சிப் பணி நிர்வாகத்தில் தலைமைப் பண்பிற்கு ஒரு அடையாளமாக விளங்கியவர்.

இவரிடத்தில் காணக்கூடிய சிறப்பு என்னவென்று கேட்டால், நேர்மை, துணிச்சல், தலைமைப் பண்பு ஆகிய மூன்றிற்கும் இலக்கண அடையாளமாக இருப்பது. இத்தகைய வலிமை மிக்க ஒரு திறமையான நிர்வாகத்திறன் உள்ளவர்தான் நம்மில் தலைமைப் பண்புமிக்கவர்.

1976ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் இருந்த ஆட்சிக் கலைக்கப்பட்டபொழுது, சில அலுவலர்களை திமுக அலுவலர் என்று சொல்லி மாற்ற வேண்டுமென்று சொன்னார்கள். அப்போது சபாநாயகம் தலைமைச் செயலாளராக இருந்தார்.

நாங்கள் அரசியல் அலுவலர் அல்ல என்றவர்: அப்போது, இவர் என்ன பதில் சொன்னார் என்றால், அனைத்து அலுவலர்களும், அரசின் அலுவலர்களே. தவிர அரசியல் அலுவலர்கள் அல்ல என்று துணிச்சலாக சொன்னார். இவரது ஆட்சிக் காலத்தில், கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியது.

ICSஇல் பணியாற்றியப் பெருமைக்குரியவர்: சபாநாயகம் விடுதலை இந்தியாவின் ஆட்சி இயலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கக்கூடியவர். விடுதலைக் காலத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டர் போன்ற பொறுப்புக்களை ‘இம்பீரியல் சிவில் சர்வீசஸ்(Imperial Civil Services - ICS)’ தேர்ச்சி பெற்றவர்கள்தான் ஆற்றுவார்கள். அந்த வகையில், ஐ.சி.எஸ் ஆகப் பணியாற்றிய சபாநாயகம், இந்திய விடுதலைக்குப் பின்னர் உருவான, தற்போது ஐஏஎஸ் என்று நாம் மதிப்போடு அழைக்கும் ‘இந்தியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ்’(Indian Administrative Service) ஆகத் தேர்வானவர்.

ஆட்சிப் பணியை ராணுவக் கட்டுபாடாக நடத்தியவர்: 100 வயதைக் கடக்கக்கூடியவர்தான்; விடுதலை இந்தியாவின் முதல் ஐஏஎஸ் பேட்ச். 70 ஆண்டு கால இந்திய ஆட்சிப்பணி வரலாற்றின் வாழும் அடையாளமாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார். தேசப்பற்று மிகுந்த இவர், ராணுவத்தில் பணியாற்றி, பிறகு ஆட்சிப்பணிக்கு வந்தவர்.

அதனால், அரசு நிர்வாகத்தில் இவரின் ராணுவக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் தனி முத்திரை பதித்துள்ளது. இந்த மாநிலத்திற்கு எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. எண்ணற்ற தொழில் வளர்ச்சியைப் உருவாக்கித் தந்திருக்கிறது. வியக்கத்தக்க முன்னேற்றத்தை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஒரு தனியார் நிறுவனம் மூடப்படக்கூடிய நிலை ஏற்பட்டபொழுது அது மூடப்பட்டால் 2,000 பேர்கள் வேலையை இழப்பார்கள். எனவே, அந்த 2000 பேர்களுடைய வாழ்க்கையை காப்பாற்ற சிந்தித்துச் செயல்பட்டவர் நம்முடைய சபாநாயகம்.

நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர்: இவரது திறமையை நன்கு உணர்ந்த காரணத்தினால் கருணாநிதி அன்றைக்கு காவல் ஆணையம் ஒன்று அமைத்தபோது, அந்தக் காவல் ஆணையத் தலைவராக சபாநாயகத்தை நியமித்தார். அதன் மூலமாக தமிழ்நாடு காவல்துறை பல பயன்கள் அடைந்திருக்கிறது. நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக ஆக்கினார்.

தமிழ்நாடு அரசு நிர்வாகம் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தது என்று இன்றைக்கு நெஞ்சை நிமிர்த்தி நம்மால் சொல்ல முடிகிறது என்றால், அதற்கு காரணமானவர் நம்முடைய சபாநாயகம்.

இளம் ஐ.ஏ.எஸ்-களுக்கு பல்கலைக்கழகமாக உள்ளார்: இளம் ஐஏஎஸ் அலுவலர்களுக்கு, சபாநாயகம் போன்றவர்கள் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். இந்திய ஆட்சிப் பணியை மக்கள் பணியாக நினைத்து செயல்படக்கூடியவர் இவர். நூறாண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அனுபவப் பாடங்களும் அத்தியாயங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அதனைப் படிக்கும் ஒவ்வொரு இளம் ஐஏஎஸ் அலுவலர்க்கும் அது வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: EWS அடிப்படையில் நுழைவுத்தேர்வா...? - சர்ச்சையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.