ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமி குறைகளை மட்டுமே கண்டு பெரிதுபடுத்துகிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

author img

By

Published : May 31, 2022, 12:00 PM IST

காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எடப்பாடி பழனிசாமி, குறைகளை மட்டுமே கண்டு அதை பெரிதுபடுத்தி பேசி வருகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தேர்தலில் ஏற்பட்டிருக்கும் தோல்விகளின் விரக்தியால் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "அதிமுகவிற்கு தேர்தலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தோல்விகளால் விரக்தியின் அடிப்படையில் திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். தமிழ்நாடு அரசியலில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தே விட்டது. சசிகலா கூட இதை கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். அதில் தமிழ்நாடு அரசின் மீது பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

இந்த ஓராண்டு காலத்தில் திமுக அரசு எண்ணற்ற பல சாதனைகளை செய்துள்ளது. நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நான் முதல்வன் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, கரோனா நிவாரண நிதி இப்படி எண்ணற்ற பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார். ஆனால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது போல எடப்பாடி பழனிசாமி இந்த உண்மைகளை மறைத்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் கிடந்தது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் சாதி மத சண்டைகள் இல்லாமல் மிக அமைதியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் முற்றிலுமாக அழித்து வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கடைசி ஓராண்டு ஆட்சியில் 1,695 கொலைகள் நடைபெற்றுள்ளன. கொள்ளைகள் 146, கூலிப்படை கொலைகள் 30, போலீஸ் துப்பாக்கிச்சூடு 16 ஆனால் திமுக ஆட்சியில் இவையெல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களே அதிமுக திமுக ஆட்சிக்கு சாட்சியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழிப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டம் வளமானதாக இல்லை. அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து கொண்டு வரப்பட்ட சட்டத்தால் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அது உறுதியான சட்டமாக கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கூட இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு பெரியது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். யார் வீட்டில் ரெய்டு நடந்தது அதிமுக ஆட்சியில் காவல் துறை தலைவராக இருந்தவர் மீது வழக்குப் பாயவில்லையா என கேள்வி எழுப்பினார். கஞ்சா விற்பனை தடுக்கும் வகையில் 813 பெயரில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எடப்பாடி பழனிசாமி குறைகளை மட்டுமே கண்டு அதை பெரிதுபடுத்தி பேசி வருகிறார். திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இசைஞானி இளையராஜாவுக்கு திருக்கடையூரில் சதாபிஷேக விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.