ETV Bharat / city

1,591 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்குத் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : Jan 17, 2022, 8:26 PM IST

1,436 சித்தா படுக்கைகள் மற்றும் 155 ஆயுர்வேத படுக்கைகள் என மொத்தம் 1,591 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில் சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டு வருகிறது.

கரோனா சிறப்பு சிகிச்சை மையம்

இந்த நிலையில் தாம்பரம் அடுத்த சானிட்டோரியத்தில் இயங்கிவரும் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடனான கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு வார்டை இன்று ஜனவரி 17ஆம் தேதி, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், 'டெல்டா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சுனாமி போன்று வேகமாகப் பரவி வருகிறது என (World Health Organization) உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

உலகளவில் சுனாமி போல் பரவும் தொற்றுக்கு இந்தியாவும் தமிழ்நாடும் விளக்கல்ல; தமிழ்நாட்டிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது.

கரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம் பெரிய பங்கு

முதல் தவணை தடுப்பூசியில் 88%, இரண்டாம் தவணை தடுப்பூசியில் 64% செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அது 100% ஆக மாற வேண்டும். இரண்டாம் அலையின்போது கரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம் பெரிய பங்காற்றியது.

கடந்த முறை 73 இடங்களில், சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 1,591 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் கரோனா கேர் சென்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை 10,360 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில், 450 படுக்கைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. மொத்தத்தில் 6% மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. செங்கல்பட்டில் உள்ள பல தனியார் கல்லூரிகளில் கரோனா கேர் சென்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இதில் 8,900 படுக்கைகள் மட்டுமே தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பண்டிகை நாளில் பற்றிக் கொண்ட தொற்றுகள்

கரோனா தொற்றுப் பரவல் குறைந்த நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறையில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரு மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் சுணக்கம் காட்டி வருகிறது. விரைவில், அங்கு ஆய்வு செய்து தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இதையும் படிங்க: வீட்டுக்கு வந்து தடுப்பூசி செலுத்தப்படும் - சென்னை மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.