ETV Bharat / city

’இரண்டு நாட்கள் காத்திருந்து பெறுவதற்குப் பெயர் எமர்ஜென்சி பாஸா?’- உயர் நீதிமன்றம் கேள்வி!

author img

By

Published : May 8, 2020, 12:47 PM IST

சென்னை: வெளியூர் செல்வதற்காக எமர்ஜென்சி பாஸ்களை 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

assembly
assembly

ஊரடங்கு காரணமாக, திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வெளியூர் செல்பவர்களுக்கு, அவசர பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த அனுமதிச் சீட்டுகள் மின்னணு முறையில் வழங்கப்படுகின்றன. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால், அனுமதிச் சீட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ” திருமணம் உள்ளிட்ட விழாக்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படுவதால், முன்கூட்டி விண்ணப்பிக்க முடியும். ஆனால், திடீரென ஏற்படும் மரணங்கள், உடல் நலக் குறைவுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தாமதமாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

மின்னணு அனுமதிச் சீட்டுகள் வழங்கும் கட்டுப்பாட்டு அறைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுவதால், அவசர கால பயணங்களுக்கு அனுமதிச் சீட்டு கோரி விண்ணப்பிக்க ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால், அவசரகால பயண விண்ணப்பங்கள் மீது, ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கவும், மருத்துவம் மற்றும் மரணங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதிச் சீட்டுகள் வழங்க உத்தரவிட வேண்டும் ” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, 24 மணிநேரமும் பாஸ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒருவர் பாஸ் பெற 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றால், எமர்ஜென்சி என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து மே 11 ஆம் தேதி அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு வெளியே சிக்கியுள்ள தமிழர்களை மீட்க ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.