ETV Bharat / city

10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி வழங்கிய முதலமைச்சர்

author img

By

Published : Oct 14, 2022, 7:54 PM IST

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி மற்றும் 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி வழங்கினார்
கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி வழங்கினார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(14.10.2022) தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் விதமாக 9 கலைமாமணி விருதாளர்களுக்கு காசோலைகளையும், 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக 10 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.

தமிழ்நாடு சங்கீத நாடக மன்றம் என்ற அமைப்பு தமிழ்நாடு பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க 1955ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என 1973ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கலை நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் வழங்கி இளம் கலைஞர்களை ஊக்குவித்தல், அயல்நாடுகளில் தமிழ்நாட்டு கலைகளைப் பரப்புதல், கலைச்சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருது வழங்குதல், அரிய கலை வடிவங்களை ஆவணப்படுத்துதல், அரிய கலை நூல்களைப் பதிப்பித்திட நிதியுதவி வழங்குதல், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல், மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை இயல், இசை, நாடக வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களில், 9 கலைமாமணி விருதாளர்களான கோவை நடராஜன், சாந்தி கணேஷ், எம்.யு. பிரேம்குமார், நா. கருமுத்து தியாகராசன், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், ஆ. லெட்சுமி, என்.ஜி. கணேசன், என். வேலவன் சங்கீதா, வை. இராஜநிதி ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொற்கிழித் தொகையாக தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

தொன்மை சிறப்புமிக்க தமிழ்நாடு கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் 10 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் சந்திர மோகன் பி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர். காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.