ETV Bharat / city

மருத்துவத்துறை மாற்றங்கள் குறித்த FlCCl-யின் சர்வதேச கருத்தரங்கு: ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது!

author img

By

Published : Jun 1, 2021, 9:00 PM IST

கரோனா பெருந்தொற்றால் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, ஃபிக்கி (FlCCl) எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் சர்வதேச கருத்தரங்கம் வரும் 4 ஆம் தேதி இணையவழியில் நடைபெறவுள்ளது.

FlCCl-யின் சர்வதேச கருத்தரங்கு
FlCCl-யின் சர்வதேச கருத்தரங்கு

சென்னை: கரோனா பெருந்தொற்றால் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஃபிக்கியின் சர்வதேச கருத்தரங்கம் இணையவழியில் நடைபெறுகிறது. 'டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மருத்துவ சேவைகளை எவ்வாறு மாற்றியமைக்கின்றன, இதனால் என்ன விதமான புதிய வாய்ப்புகள் உருவாகின்றன' என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த மெய்நிகர் கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இதையொட்டி இணையவழி கண்காட்சியும் நடைபெறும்.

கரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவத்துறையில் பின்பற்றி வந்த நடைமுறைகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மிக புரட்சிகரமான புதிய மாற்றங்களை மருத்துவத்துறையில் ஏற்படுத்தி வருகின்றன. இதன் வாயிலாக மருத்துவ சேவை பாதுகாப்பு மற்றும் கண்டறிதல் ஆகியவை புதிய பரிமாணம் கண்டுள்ளன.

இந்த மாற்றங்கள் குறித்தும், இதனால் ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத்தில் உலக அளவில் மருத்துவத்துறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், அதன் தாக்கங்கள் ஆகியவை குறித்தும் ஃபிக்கியின் கருத்தரங்கில் விவாதிக்கப்படும். இதன் மூலமாக மருத்துவச் சமூகம் எதிர் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மேம்படுத்தி தயார்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தக் கருத்தரங்கில் பெரிய மற்றும் சிறிய மருத்துவமனையை சேர்ந்தவர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் நோயாளிகளை மையப்படுத்திய மருத்துவத் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து பேசுவர்.

மருத்துவத்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் அதை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதன் வாயிலாக நோயாளிகளுக்கு கிடைக்கும் சேவையின் தரம் அதிகரிக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஃபிக்கி மருத்துவ கருத்தரங்கில், எஸ்டோனியா நாட்டு தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய துணைத் தூதரகம் ஆகியோர் அறிவுசார் கூட்டாளிகளாக இணைந்துள்ளனர். இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், துறை முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, ஃபிக்கி தமிழ்நாடு பிரிவு தலைவர் டாக்டர் ஜிஎஸ்கே வேலு, ஃபிக்கி தமிழ்நாடு மருத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பாளரும், எம்ஜிஎம் மருத்துவக் குழுமத்தின் இயக்குநருமான டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன், கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் கிருஷ்ணா எல்லா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக இருபத்தைந்து மெய்நிகர் கூடங்களில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மென்பொருள் விற்பனையாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்துறையினர், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், ஆன்லைன் மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், அரசு துறை பிரதிநிதிகள் ஆகியோர் தங்களது துறை சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவர். இந்த இணைய வழி கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது ஈ டிவி செய்தி தளம் இதில் ஒரு பங்குதாரராக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.