ETV Bharat / city

'எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது' - திமுக மீது ஈபிஎஸ் காட்டம்

author img

By

Published : Jul 31, 2022, 10:17 AM IST

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டையும், பல வேலைவாய்ப்பையும் உதாசீனப்படுத்தியதாக திமுக அரசு மீது குற்றஞ்சாட்டி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை
திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு மக்களுக்கு நலம் பயக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனவும், கமிஷன் என்ற பெயரில் பல நல்ல திட்டங்களை கோட்டைவிட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடும்ப நலனே குறி: அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை இந்த விடியா அரசு தனது ஆணவத்தாலும், அலட்சியத்தாலும், "எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்" என்ற ஆக்டோபஸ் கூத்தாலும் விரட்டி அடித்துள்ளது.

தமிழ்நாடு மக்களின் நலனை பேணுவதற்கு பதிலாக, தன் குடும்ப நலனைக் காப்பதில் குறியாக இருக்கும் இந்த விடியா அரசினுடைய முதலமைச்சரின் நிர்வாகத் திறமை இன்மையால் தமிழ்நாடு மக்களின் நலன்கள் அடகு வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றன. தமிழ்நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்குவதற்கு பதில் தங்கள் குடும்ப வளத்தைப் பெருக்குவதிலேயே ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுவது, மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

வேலைவாய்ப்பளிக்கும் வேதாந்தா: வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் (Faxcon) நிறுவனங்கள் இரண்டும் இணைந்து, தமிழ்நாட்டில் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்தது. இந்த விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள் தங்களின் பேராசையால் இம்முதலீட்டை விரட்டியடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வேதாந்தா நிறுவனம் 1976 முதல் இந்தியாவில் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது. குறிப்பாக, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் சுரங்கம், உலோக தயாரிப்புத் தொழில்களில் ஈடுபட்டு, பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

கரப்ஷன்,கலெக்‌ஷன்,கமிஷன்: இந்நிலையில், வாகனங்களுக்குத் தேவையான “செமிகண்டக்டர்" எனும் இயந்திர சாதன உற்பத்தி ஆலையை தொடங்க வேதாந்தா நிறுவனமும், பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்து, இதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் மேலும் சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இந்த ஆட்சியாளர்கள் விதித்த "கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன்" நிபந்தனைகளால் இந்த தொழிற்சாலை மும்பைக்குச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் மகாராஷ்டிர மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் 2 லட்சம் பேருக்கு நோடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. மேலும், மொத்த ஜிஎஸ்டி வருவாயாக சுமார் 1 லட்சத்து 20 ஆயிம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் அகோரப் பசியால்...: தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய இந்த முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஆட்சியாளர்களின் அகோரப் பசியால் கைநழுவி போனதன் விளைவாக, தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த விடியா அரசு, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு உட்பட இதர கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், இந்த முதலீட்டில் ஆட்சியாளர்கள் தங்கள் குடும்ப ஆதாயத்தை எதிர்பார்த்ததால், தொழில் முதலீடுகள் இடம் மாறிவிட்டதாக விபரம் அறிந்த தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில்...: 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு, தனியாரின் பங்களிப்பே இன்றியமையாததாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பல் வளர்ந்தன. குறிப்பாக, அம்மாவின் அரசில் எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கரூர் மாவட்டம், புகளூரில் மிகப் பெரிய காகித ஆலை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கூட்டு நிறுவனமாக டைட்டன் கைக்கடிகார தொழிற்சாலை ஆகியவையும், தொடர்ந்து புகளூர் காகித ஆலையின் விரிவாக்கமாக திருச்சி, மொண்டிப்பட்டியில் காகித தொழிற்சாலையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார்.

திமுகவிடம் சிக்கித்தவிக்கும் தொழிற்சாலைகள்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசில், தொழில் முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் சும்பளம் விரிக்கப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. எங்களது சாதனைகளையும், முயற்சிகளையும், தாங்கள் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் பணியினை இந்த விடியா திமுக அரசு தற்போது செய்து வருகிறது.

திமுகவின் 18 ஆண்டுகால ஆட்சியில், அரசின் சார்பாக எந்தெந்த தொழிற்சாலைகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? தவறிப்போய் ஒன்றிரண்டு தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்தாலும், பேராசை பிடித்த திமுக ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றார்கள் அல்லது ஓடிவிடுகின்றார்கள்.

இனியும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்: மக்கள் நலனில் அக்கறை காட்டாத இந்த விடியா அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தங்கள் சுயநலனுக்காக மக்கள் நலனை அடகு வைக்கும் இந்த ஆட்சியாளர்களை, இனியும் மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டார்கள். அவர்கள் கொதித்தெழும் காலம் விரைவில் வரும் என்று எச்சரிக்கிறேன்.

"சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது" என்பதை இந்த விடியா திமுக அரசுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "எனக்கு கேரளாவில் ரசிகர் கூட்டம் இருப்பது போலவே ‘காம்ரேட்’ பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறது"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.