ETV Bharat / city

மின்கட்டண உயர்வு நடவடிக்கை மின்சார வாரியத்தை கடனில் இருந்து மீட்க உதவுமா...?

author img

By

Published : Jul 30, 2022, 5:56 PM IST

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிதிச்சுமையில் சிக்கியுள்ள மின்வாரியத்தை மீட்கவே இந்த நடவடிக்கை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காண்போம்...

EB
EB

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27 ரூபாய் 50 காசுகளும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72 ரூபாய் 50 காசுகளும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18 லட்சத்து 82 ஆயிரம் மின் நுகர்வோர்களுக்கு, மாதத்திற்கு 147 ரூபாய் 50 காசுகளும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதித் சுமையில் சிக்கியுள்ளதால், கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, இந்த மின்கட்டண உயர்வு குறித்து, மின் நுகர்வோர் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் இணையத்தில், ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை மின்நுகர்வோர் தங்களது கருத்துகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை என்பது எழுதப்படாத விதி போல ஆகிவிடும் என பொதுமக்கள் விமர்சித்து வந்த நிலையில், இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளானது. ஆனால், மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின் கட்டணத்தை உயர்தவில்லை என்றால், மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படும் மானியத்தை நிறுத்தி விடுவோம் என நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் வழங்கக்கூடாது என ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியதாகவும், இதனால் வேறு வழியில்லாமல் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்கட்டணம் உயர்த்தப்படுவதால், பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மின் வாரியத்திற்கு மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்கான வட்டித்தொகையாக மட்டும் வருடத்திற்கு 16 ஆயிரத்து 511 கோடி ரூபாயை மின்வாரியம் செலுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி அதிக தொகைக்கு வாங்க வேண்டிய சூழல் இருப்பதால், இன்னும் முப்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. மின்சார வாரியம் இவ்வளவு கடனில் இருப்பதற்கு காரணம் திமுக என்று அதிமுகவும், அதிமுக என்று திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.

மின் கட்டண உயர்வு குறித்து நம்மிடையே பேசிய சமூக ஆர்வலரும், சிட்லப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான P.விஸ்வநாதன், "மின்கட்டண உயர்வு என்பது பொதுமக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய விஷயம். மின்கட்டணத்தை உயர்த்த நினைக்கும் அரசு, மக்களின் பொருளாதாரத்தை பற்றியும் சிந்திக்க வேண்டும். மின் கட்டணம் இனி வரும் காலங்களில் மக்களுக்கு பெரும் சுமையாக மாறும்.

மின்சார உயர்வு குறித்து மக்களுக்கு தெளிவான பதில்களை அரசு கூற வேண்டும். அடுத்து எத்தனை வருடத்திற்கு கட்டணம் உயர்த்தாமல் இருப்பீர்கள்? வீட்டிற்கு ஒரு இணைப்பு போன்ற செயல்களின் தெளிவான தகவலை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என்றால், வாடகை வீட்டில் இருப்பவர்களின் நிலை என்ன? என்பதை விளக்க வேண்டும். மின்சார வாரியம் வியாபார நோக்கத்துடன் செயல்பட்டால் தனியார் மையமாக ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மின்விநியோகத்தின்போது ஏற்படும் ட்ரான்ஸ்மிஷன் லாசை (Transmission loss) குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் வருடத்திற்கு எட்டாயிரம் கோடி ரூபாய் சேமிக்கலாம். மின் திருட்டை தடுக்க வேண்டும். இது போன்ற செயல்களை சரியாக செய்தால் மின்சார வாரியம் மீள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்று கூறினார்.

தமிழ்நாட்டில் மொத்த கடன் 6.5 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மின்சார வாரியத்திற்கு மட்டும் 1.59 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த நிலையிலும் விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. வீட்டிற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது போன்ற திட்டங்களில் பயனாளர்களை சரியாக தேர்வு செய்து திட்டத்தை முறையாக செயல்படுத்துவது, மின் கட்டண உயர்வுக்குப் பிறகு கிடைக்கும் வருவாயை முறையாக பயன்படுத்துவது, காற்றாலை மின்னுற்பத்தியை அதிகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தினால் மின்சார வாரியம் கடனிலிருந்து மீள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு: முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.