ETV Bharat / city

ஆமை வேகத்தில் முதலமைச்சரின் துறை! - திமுக எம்பி புகார்!

author img

By

Published : Jan 27, 2021, 6:21 PM IST

சென்னை: முதலமைச்சரின் நெடுஞ்சாலைத்துறை 6 ஆண்டுகளாக மணலி மேம்பாலத்தை ஆமை வேகத்தில் கட்டி வருவதாக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

mp
mp

தொழிற்சாலைகள் நிறைந்த மணலி பகுதிக்கு செல்ல, முக்கிய இணைப்பு சாலையாக இருக்கும் திருவொற்றியூர்-மணலி சாலையில் உள்ள மேம்பாலம் வலுவிழந்திருந்ததால், அதனை அகற்றி புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 42 கோடி ரூபாய் செலவில், இரண்டு கி.மீ தூரத்திற்கு மேம்பாலங்களை கட்டி, 2018 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிப்பதாக திட்டமிடப்பட்டது.

ஆனால், ஆறு ஆண்டு காலமாகியும் இதுவரை அப்பணிகள் முடிக்கப்படாமல், மந்த நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் மணலியிலிருந்து மாதவரத்திற்கு, 5 கி.மீ தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மேம்பாலப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, 100 பேர் வேலை செய்யும் இடத்தில் 35 பேரை மட்டுமே வைத்து பணி நடைபெறுவதாகவும், இப்பணி நிறைவடைய இன்னும் ஓராண்டு காலமாகும் எனவும் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆமை வேகத்தில் முதலமைச்சரின் துறை! - திமுக எம்பி புகார்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி வீராசாமி, “முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத்துறை ஆமை வேகத்தில் மேம்பாலப்பணிகளை செய்து வருகிறது. ஜெயலலிதா நினைவு மண்டப திறப்பிற்கு வரும் அதிமுகவினரை அழைத்துவர, மாநகரப் பேருந்துகளை பயன்படுத்தியதால் ஏராளமானோர், பேருந்துகள் இல்லாமல் வெகுநேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மக்களைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாத அரசாக இந்தரசு செயல்பட்டு வருகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து, மணலி அருகே உள்ள மத்திய அரசின் கான்கர் நிறுவனத்தில், வேலை மறுக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் 10 பேரை நேரில் சந்தித்த கலாநிதி, விரைவில் கான்கர் நிறுவனத்துடன் பேசி வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: மாநகரப் பேருந்திலிருந்து தவறிவிழுந்து முதியவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.