ETV Bharat / city

கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது: வசந்தபாலன் வேதனை!

author img

By

Published : Aug 5, 2022, 2:08 PM IST

கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது என யூ-ட்யூப் சேனல் ஒன்று நடத்திய விருது வழங்கும் விழாவில் இயக்குநர் வசந்தபாலன் வேதனை தெரிவித்தார்.

விருது வழங்கும் விழாவில் வசந்தபாலன் வேதனை
விருது வழங்கும் விழாவில் வசந்தபாலன் வேதனை

'மவுண்டு நெக்ஸ்ட்' யூ-ட்யூப் சேனல் பல்வேறு துறைகளில் இருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில், இதன் அடுத்த கட்டமாக 'மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022 ' என்கிற பெயரில் குறும்பட திருவிழா ஒன்றை நேற்று (ஆக. 4) நடத்தினர். இந்த இந்த குறும்பட திருவிழாவில் பல்வேறு விதமான குறும்படங்கள் கலந்துகொண்டு அவற்றில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அப்படங்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.

இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர் சிவி குமார், ஒளிப்பதிவாளர் வில்சன், எடிட்டர் சான் லோகேஷ், கலை இயக்குனர் துரைராஜ், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ஸ்டண்ட் இயக்குநர் விக்கி, நடிகர் எம்.எஸ். பாஸ்கர், ரேடியோ சிட்டி மேனேஜர் ஜெர்ரி, மவுண்ட் நெஸ்ட் நிறுவனத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசியபோது இயக்குநர் வசந்தபாலன், குறும்பட போட்டியில் கலந்து கொண்டவர்களையும், விருது வென்றவர்களையும் பாராட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட ஐந்து குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. இந்த ஐந்து குறும்படங்களிலும் இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது டைரக்ஷன் திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இன்றைய படைப்பாளிகளுக்கு டெக்னாலஜி கதவுகள் அகலமாக திறந்தே இருக்கின்றன. அதனால், சாதாரண ஒரு கதையை கூட உங்களால் அழகாக எளிதாக படமாக்க முடிகிறது.

அதேசமயம் தமிழ் சினிமா ஒரே ஒரு விஷயத்தில் தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அது நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக திரைக்கதை (Screenplay) எழுத்தாளர்கள் இல்லாததுதான். தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம். இதற்கு முன்பும் கூட இப்படி குறும்பட போட்டிகள் நடந்தன. உங்களைப் போன்ற பல நூறு இயக்குநர்கள் வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜாக, ரஞ்சித்தாக மாறுகின்றனர். ஆனால் எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவிற்குள் வரவே இல்லை.

இப்போது இங்கே வழங்கப்பட்ட விருதுகளில் கூட கதாசிரியருக்கு என ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. இங்க இருக்கும் தயாரிப்பாளர்கள் இனிவரும் காலத்தில் கதாசிரியர்களிடம் இருந்து கதையை பெற்றுக்கொண்டு, அதன்பிறகு ஹீரோக்களை தேடிச்செல்ல வேண்டும்.

இங்கு இருக்கும் இயக்குநர்களுக்கு அசாத்திய திறமை நிறையவே உள்ளது. ஆனால், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு கதாசிரியர்கள் தான் தமிழ் சினிமாவில் இல்லை. மலையாள திரை உலகில் கதாசிரியர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அங்கே கதாசிரியர்களிடம் கதையை முடிவு செய்த பின்பு தான், மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை தேடி செல்கிறார்கள். அதுபோல இங்குள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கதாசிரியர்களை கொண்டாட வேண்டும்.

இங்கே திரையிடப்பட்ட ‘ஓப்பன் தி பாட்டில்’ குறும்படத்தில் கூட வசனங்களை நீக்கிவிட்டு பார்த்தால் அது ஒரு ஆங்கில படம்தான். தமிழ் படம் என்கிற முத்திரையை பதிக்க ஏதோ ஒரு இடத்தில் தவறி விடுகிறோம். நாளைய இயக்குநர்கள் என்கிற போட்டி மூலம் இயக்குநர்கள் தான் வருகிறார்களே தவிர, எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் வருவதில்லை. அடுத்த வருடமாவது எழுத்தாளர்களுக்கான விருதுகளை கொடுங்கள்.

இந்தியாவிலேயே முதன்முறையாக சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க, ஒரு இயக்குநரால் எளிதாக கனவு காண முடியும். ஆனால் அதை சாத்தியமாக்கியது வில்சன் போன்ற ஒளிப்பதிவாளர்கள்தான். அவருடைய வெற்றிதான் ‘இரவின் நிழல்’ படம். அந்த வகையில் டெக்னிக்கலாக தமிழ் சினிமா மிகப்பெரிய இடத்தில் இருக்கிறது. ஆனால், கதாசிரியர் என்கிற ஒரு இனம் அழிந்துவிட்டது. கதாசிரியர் என்கிற இனத்திற்கு இந்த மேடையில் ஒரு நாற்காலியாவது கொடுத்திருக்க வேண்டும்.

எப்போது சினிமாவிற்கான புரிதல் கொண்ட கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகம் உருவாக்கப்படுகிறார்களோ, அப்போது வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றிபெறும், ரசிகர்களால் கொண்டாடப்படும். இந்த ஐந்து படத்திலும் எழுத்து என்பது ரொம்பவே மிஸ்ஸிங்.

இயக்குநராக என்னுடைய ஸ்கிரிப்ட்டை கொடுத்து செக் பண்ணுவதற்கு கூட இங்கே ஸ்கிரீன்பிளே ரைட்டர்ஸ், ஸ்கிரீன்பிளே டாக்டர்ஸ் என யாரும் இல்லை. அப்படியே யாராவது ரைட்டர் ஆக இருந்தால் அடுத்த படத்தில் இயக்குநராக மாறி விடுகிறார்கள்.

காரணம், இயக்குநர்களுக்கு அதிகபட்ச மரியாதை கிடைக்கிறது என்பதுதான். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என போட்டுக்கொண்டால்தான் மரியாதை என ஒரு பொய்யான பிம்பம் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. நான் ஒரு தயாரிப்பாளராக, கதாசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தர தயாராக இருக்கிறேன். தயவுசெய்து எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் தமிழ் சினிமாவுக்கு வாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: பல தடைகளை தாண்டி வெளியானது அதர்வாவின் குருதி ஆட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.