ETV Bharat / city

ஜெயலலிதா செலுத்த வேண்டிய நிலுவை வரி குறித்த விவரங்களை கேட்கும் தீபக் - மறுக்கும் வருமான வரித் துறை!

author img

By

Published : Jan 4, 2021, 5:09 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய நிலுவை வரி விவரங்களை வழங்கக்கோரிய வழக்கில், வருமான வரித் துறை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Deepak asks for details of outstanding tax payable by Jayalalithaa - Income Tax Department refuses
ஜெயலலிதா செலுத்த வேண்டிய நிலுவை வரி குறித்த விவரங்களை கேட்கும் தீபக் - மறுக்கும் வருமான வரித்துறை!

போயஸ் தோட்டத்தில் வாழ்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை அவரது நினைவு இல்லமாக மாற்ற 2017ஆம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. இதற்கு அவரது அண்ணனின் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, தங்களை அவரது வாரிசுகள் என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை அவரது அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் வழங்கியதோடு, அவர்களை ஜெயலலிதாவின் முதல்நிலை சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது வருமான வரித் துறை தரப்பு, மறைந்த ஜெயலலிதாவிடமிருந்து தங்களுக்கு 36.9 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஏதுவாக தீபா, தீபக் ஆகியோருக்கு சேர வேண்டிய இழப்பீட்டை வழங்கும் வகையிலும், வருமான வரித் துறைக்குச் செலுத்த வேண்டிய வரியை செலுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் 67.9 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.

அதன்படி, வேதா நிலைய இல்லத்திற்கு 32 கோடி ரூபாயை (இடத்திற்கு 29.3 கோடி ரூபாய், கட்டடத்திற்கு 2.7 கோடி ரூபாய்) தீபா, தீபக் தரப்புக்கு தரவும், 36.9 கோடி ரூபாய் வரி பாக்கியை வருமான வரித் துறைக்குத் தரவும் அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி, சொத்து வரி பாக்கி உள்ளிட்டவை தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கைவிடுத்து தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

அந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று (ஜன. 04) விசாரணைக்கு வந்தது.

Deepak asks for details of outstanding tax payable by Jayalalithaa - Income Tax Department refuses
ஜெயலலிதா செலுத்த வேண்டிய நிலுவை வரி குறித்த விவரங்களை கேட்கும் தீபக் - மறுக்கும் வருமான வரித்துறை!

அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் சுதர்சனம், “கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தக் கோரிக்கையை வருமான வரித் துறையிடம் மனுவாக அளித்தோம். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாகவே தற்போது நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கு வருமான வரித் துறை சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் ஸ்ரீனிவாஸ், “வருமான வரி, சொத்து வரி போன்ற விவரங்கள் வேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலரை அணுக வேண்டும். ஒட்டுமொத்தமாக எல்லா விவரங்களையும் எங்களுக்கு கொடுங்கள் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரக் கூடாது” எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், “இந்த வழக்கில் வருமான வரித் துறை உள்ளிட்ட அனைவரும் பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மனுதாரர் யாரை அணுக வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க : மநீம கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.