ETV Bharat / city

பாதிக்கப்பட்ட பார்வதியம்மாவுக்கு உதவுங்கள் - சூர்யாவுக்கு சிபிஎம் கடிதம்

author img

By

Published : Nov 12, 2021, 10:26 PM IST

Updated : Nov 13, 2021, 7:27 AM IST

ஜெய்பீம் படத்தின் வெற்றி எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்
சூர்யாவுக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஜெய்பீம் திரைப்படம் குறித்து சூர்யாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட இருளர் சமூகத்தைச் சார்ந்த ராஜாக்கண்ணு, அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்போராட்டங்களையும், சட்டப் போராட்டத்தையும் நீண்ட காலம் தொடர்ச்சியாக நடத்தியது.

கட்சியின் தொடர்ச்சியான தலையீடு மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக கோரிக்கையில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது.

ராஜாக்கண்ணுவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு நிவாரணத்தையும் அரசிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பெற்றுத் தரவும் முடிந்தது.

இதனைக் கருப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜெய்பீம் படத்தின் வெற்றி, எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே கருதி பெருமையடைகிறோம்.

பொதுவாக ஒரு உண்மைச் சம்பவம் திரைப்படமாக வெளியாகும் போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே.

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எச்சரிக்கை மணி

ஆனாலும் அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.

இவ்வழக்கில் நெஞ்சுறுதியோடு போராடிய ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினர் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஒரு ஏழைத் தொழிலாளியாகவே இன்றும் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள்.

சிறப்பானதொரு திரையாக்கத்தின் மூலம் பார்வதி போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பார்வதிக்கும் அவர்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் இத்தகைய சமூக அக்கறையுடன் கூடிய முயற்சிகள் தொடர்ந்திட மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சூர்யாவின் படம் தியேட்டர்களில் திரையிட்டால் கொளுத்துவோம் - காடுவெட்டி குரு மருமகன் எச்சரிக்கை

Last Updated :Nov 13, 2021, 7:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.