ETV Bharat / city

தும்பை விட்டுவிட்டு, வாலை குறை சொல்லும் கதையை சொல்கிறது அதிமுக - கே.பாலகிருஷ்ணன்

author img

By

Published : Jul 14, 2021, 7:53 PM IST

தும்பை விட்டுவிட்டு, வாலை குறை சொல்லும் கதை போல் உள்ளது நீட் தேர்வு குறித்து அதிமுக பேசுவது என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கே பாலகிருஷ்ணன்
கே பாலகிருஷ்ணன்

சென்னை: விருகம்பாக்கம் அன்னை சத்தியா நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 100 மரக்கன்றுகள் நடும் விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 14) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான சங்கரய்யாவின் நூற்றாண்டு விழா நாளைய (ஜூலை 15) தினம் தொடங்குகிறது. ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

8 கோடி மக்கள் முறியடிப்பார்கள்

கம்யூனிஸ்ட்களின் கோரிக்கையான ஒன்றுபட்ட தமிழ்நாடு வேண்டும் என்பதை ஏற்றுதான் மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அதற்கு, கலங்கம் விளைவிக்கும் வகையில் கொங்குநாடு என்ற திசை திருப்பும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறுது.

கொங்கு மண்டலத்தில் காலூன்ற பாஜக நினைக்கிறது. எட்டு கோடி தமிழ் மக்களை ஒன்றிணைத்து பாஜகவின் முயற்சியை முறியடிப்பார்கள். மேலும், இந்த கரோனா காலத்தில் கூட நீட் தேர்வை அறிவித்து உள்ளார்கள்" என விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக திணறுகிறது

அதிமுக ஊடக விவாதங்களைப் புறக்கணித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,"அதிமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்றவர்கள் நெறியாளர்கள், மாற்றுக் கட்சியினர் கேட்கக்கூடிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறுவதால், அக்கட்சியின் தலைமை இந்த முடிவினை அறிவித்திருக்கலாம். ஆனால், அதற்காக ஊடகங்களை குறைகூறுவது கூடாது" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், "பாஜக என்னதான் தலைவரை மாற்றி, முலாம்பூசும் வேலையை செய்தாலும் தமிழ்நாடு மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அமைச்சர் பணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாடு மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்.

ஜெயலலிதாபோல் எடப்பாடி இல்லை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி நீட் தேர்வை தடுத்தாரோ, அதேபோல எடப்பாடி அரசு தடுத்திருக்க வேண்டும். ஆனால், தும்பை விட்டுவிட்டு வாலை குறை சொல்லும் கதை போல் உள்ளது, நீட் தேர்வு குறித்து அதிமுக பேசி வருகிறது.

நீட் தேர்வை எதிர்த்து இந்த அரசாங்கம் உறுதியாகப் போராடுகிறது, இந்தப் போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஆனால், அதிமுக இதுகுறித்து கேள்வி எழுப்ப எந்தத் தார்மீக உரிமையும் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுக்கு அனைத்துவிதத்திலும் அறிக்கை உதவியாக இருக்கும் - ஏ.கே. ராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.