ETV Bharat / city

பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்ட திமுக எம்எல்ஏ மீது புகார்!

author img

By

Published : Apr 3, 2022, 6:51 AM IST

ஒரு லட்சம் மாமூல் கேட்டு பார் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த எம்எல்ஏ கே.பி. சங்கர் மீது பார் உரிமையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பார் ஓனரிடம் மாமூல் கேட்ட திருவொற்றீயூர் திமுக எம்எல்ஏ மீது புகார்!
பார் ஓனரிடம் மாமூல் கேட்ட திருவொற்றீயூர் திமுக எம்எல்ஏ மீது புகார்!

சென்னை:சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ஜோஷ்வா(52). இவர் அதே பகுதியில் அரசு அனுமதி பெற்று கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி. சங்கர் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக ஜோஷ்வா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷ்வா, “பல வருடங்களாக எந்தவித பிரச்சனை இல்லாமல் பார் நடத்தி வந்ததாகவும், சங்கர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல் பார் நடத்த வேண்டுமென்றால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் மாமூலாகத் தர வேண்டும் என மிரட்டி வருவதாகக் கூறினார். இதனால் பயந்து மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் மாமூலாக கே.பி. சங்கருக்கு வழங்கி வந்ததாக கூறினார்.

இருப்பினும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கே.பி சங்கர் அடியாட்களுடன் வந்து இனிமேல் மாதம் 1 லட்சம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் பார் உரிமத்தையும், இடத்தினையும், எழுதிக் கொடுக்கும் படி மிரட்டிச் சென்றதாகத் தெரிவித்தார். பாரை எழுதிக் கொடுக்க மறுத்ததால் கடந்த சில நாட்களாக கே.பி சங்கர் மற்றும் அவரது அடியாட்களான கார்த்தி, சேகர் ஆகியோர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

பார் ஓனரிடம் மாமூல் கேட்ட திருவொற்றீயூர் திமுக எம்எல்ஏ மீது புகார்!

பார் ஊழியர்கள் மீது தாக்குதல்: இந்நிலையில் இன்று திடீரென பாருக்குள் புகுந்த கே.பி சங்கரின் அடியாட்கள் கட்டையால் அங்கு வேலை பார்த்து வந்த ஊழியர்கள் ஹரிஹரன், விஜி ஆகியோரை தாக்கியதுடன், கொலை செய்து விடுவதாக கே.பி சங்கர் போனில் மிரட்டல் விடுத்தாக தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி எம்எல்ஏ கே.பி சங்கர் மணலி, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் பார் நடத்தும் உரிமையாளர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டினார். எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எம்எல்ஏ சங்கர் மற்றும் அவரது அடியாட்கள் தான் காரணம் என தெரிவித்தார்.

எனவே காவல்துறை எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் எம்.எல்.ஏ கே.பி சங்கர் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆடியோ ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே எம்எல்ஏ சங்கர் பார் உரிமையாளர், மேலாளரை போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:ஆம்பூரில் பைக்கை வேகமாக ஓட்டியது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் - 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.