ETV Bharat / city

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் அறிவிப்பு

author img

By

Published : May 17, 2022, 12:46 PM IST

Updated : May 17, 2022, 1:04 PM IST

திருநெல்வேலி மாவட்ட கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா ரூபாய் பத்து லட்சம் மற்றும் தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருநெல்வேலி கல்குவாரியில் கல் சரிந்து விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணி 48 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் மே 14 ஆம் தேதி அன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் முருகன் (வயது 23) மற்றும் நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் செல்வன் (வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி தற்போது கிடைத்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லை குவாரி விபத்து மேலும் ஒருவர் பலி!- மீதமுள்ள இருவரின் நிலை என்ன?

Last Updated : May 17, 2022, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.