ETV Bharat / city

தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் நோய்த்தொற்று அதிகரிப்பு - முதலமைச்சர் கவலை

author img

By

Published : Apr 29, 2020, 1:21 PM IST

Updated : Apr 29, 2020, 1:55 PM IST

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார்.

meeting
meeting

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்குத் தளர்வு உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், ”மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதால்தான் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. எனவே, மக்கள் கட்டாயமாக அதனைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல், சந்தைகளில் மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்க தன்னார்வலர்களை மாவட்ட ஆட்சியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசின் ஊரடங்குத் தளர்வு உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் சரியான முறையில் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

வேளாண் பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுமின்றி அனுமதிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் டோக்கன் முறையைப் பயன்படுத்த வேண்டும்.

முகத்திரை, தகுந்த இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதிக ஆள்கள் இருந்தால் இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து பணி வழங்கலாம்.

மத்திய அரசு அனுமதித்துள்ள மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழிற்சாலைகள், ஜவ்வரிசி தொழிற்சாலைகள், இரும்பு ஆலைகள் இயங்க ஆட்சியர்கள் அனுமதியளிக்கலாம். தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது“ எனத் தெரிவித்தார்.

தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்காததால் நோய் தொற்று அதிகரிப்பு - முதலமைச்சர்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. வேலுமணி, விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு - ஸ்டாலின் கண்டனம்!

Last Updated : Apr 29, 2020, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.