ETV Bharat / city

படிக்கட்டில் தொங்கினால் சட்ட நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர்

author img

By

Published : Apr 19, 2022, 2:06 PM IST

படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்து இடையூறு செய்யும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படிக்கட்டில் தொங்கினால் சட்ட நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர்
படிக்கட்டில் தொங்கினால் சட்ட நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால், ஏற்படும் விபத்துகளைத் தடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் தோழன் அமைப்பினர் இணைந்து பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி ஒரு வாரத்தில் 100 பள்ளிகளைத் தேர்வு செய்து விழிப்புணர்வு நடத்தத் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக இன்று சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள எம்.சி.சி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் கபில் சரட்கர் மற்றும் தோழன் அமைப்பினர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்குச் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

பின்னர் விபத்து நடந்தவுடன் முதலுதவி அளிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்குத் தோழன் அமைப்பினர் செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று முதல் 100 பள்ளிகளுக்குச் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், இதில் 25,000 மாணவர்கள் பங்கேற்க இருப்பதாக அவர் கூறினார்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக வாரத்தில் 5 நாள்கள் ஸ்பெஷல் டிரைவ் மேற்கொண்டு வருவதாகவும், நம்பர் பிளேட், புட் போர்டு, ஒரு வழிப்பாதை, மாணவர்கள் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

படிக்கட்டில் தொங்கினால் சட்ட நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர்

சாலை விதிமீறல்களில் ஈடுபட்டவருக்குச் செலான் வழங்கியும், அபராத தொகையை முறையாகச் செலுத்தத் தவறியவர்களுக்காகப் போக்குவரத்து கால் சென்டர் தொடங்கி இருப்பதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் சென்றதாக விதிக்கப்பட்ட 96 நிலுவை அபராத செலான்களை ஒரு நபர் இரண்டே நாட்களில் செலுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களை வரவழைத்து விழிப்புணர்வு: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து, ரயில்களில் அராஜகத்தில் ஈடுபட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோரை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கஞ்சா வேட்டை ஆப்ரேஷனில் காவலர்கள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டாலும் சட்டப்படி எடுக்கப்படும், நேற்று இதே போல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு காவலர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். போதைப் பொருள்கள் விற்போர் குறித்த விவரங்கள் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும் எனவும் ரகசியம் கசிந்தால் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விதியை மீறினால் ஒட்டுநர் உரிமம் ரத்து: பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவதைத் தடுக்க சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் 350க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்களை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டினால் வாகனப் பதிவு ரத்து செய்யப்படும் என அவர் கூறினார். வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி மாணவர் பலியான விவகாரத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் மீது எந்த தவறும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆடியோ குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை எனவும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்டால் அது குற்றமாகும், புகார் வந்தால் சட்ட ஆலோசனை பெறப்பட்டு அதன் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.