ETV Bharat / city

தொடர் கஞ்சா கடத்தல்: 3 குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.5.5 கோடி சொத்துக்கள் முடக்கம்

author img

By

Published : Jun 28, 2022, 9:33 PM IST

தமிழ்நாட்டில் தொடர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 குற்றவாளிகளின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

தொடர் கஞ்சா கடத்தல்
தொடர் கஞ்சா கடத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைளில் மிக முக்கியமானதாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நலையில் தற்போது காவல் துறையினர் மதுரையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒரு குடும்பத்தினரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியுள்ளது.

குறிப்பாக மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்தாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த நவம்பர் 2021 ஆம் ஆண்டு ஒத்தக்கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தப்பட்ட 170 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மதுரையைச் சேர்ந்த காளை, பெருமாயி என்ற தம்பதியை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த 3 ஆவது குற்றவாளியான பேரையூரைச் சேர்ந்த அய்யர் என்பவரை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த நபரை இந்த வழக்கிலும் காவல் துறையினர் கைது செய்து 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா விற்கும் தொழில் செய்து அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளையும் அவரது உறவினர்கள் பெயரில் ஈட்டியுள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம் என்ற சட்ட அடிப்படையில் டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளான காளை, பெருமாயி மற்றும் அய்யர் ஆகிய 3 பேர் மற்றும் அவர்களின் உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வாகனங்கள், வங்கி கணக்குகளில் உள்ள இருப்பு தொகை மற்றும் வரவு செலவு ஆகியவற்றை பற்றி விரிவாக கணக்குகள் எடுக்கப்பட்டும், நிதி விசாரணை செய்தும், சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை காவல்துறை முடக்கியுள்ளது.

இதேபோல கஞ்சா தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் உறவினர்களின் சொத்துக்களை முற்றிலுமாக முடக்க கடுமையான நடவடிக்கை காவல்துறையின் மூலம் எடுக்கப்படும் எனவும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் என அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கஞ்சா வியாபாரிகள் மற்றும் கஞ்சா கடத்துபவர்கள் மட்டுமல்லாது அவர்களின் உறவினர்களின் சொத்துக்களும் சட்டப்படி முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை மூலம் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேலூரில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் ரோடு: வீடியோ வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.