ETV Bharat / city

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கு - நடிகை மீரா மிதுனுக்கு 2-வது முறையாக பிடி வாரண்ட்!

author img

By

Published : Aug 6, 2022, 7:27 PM IST

Updated : Aug 6, 2022, 8:54 PM IST

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Arrest
Arrest

சென்னை: திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தது. பின்னர் இருவரும் ஜாமீன் பெற்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ். அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம். சுதாகர் ஆஜரானார். சாட்சிகள் விசாரணை தொடங்கிய நிலையில், வழக்கின் சாட்சிகளும், மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக்கும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் மீரா மிதுனும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, சாட்சி விசாரணையன்று குற்றம்சாட்டப்பட்டவர், அவரது வழக்கறிஞர் யாரும் ஆஜராகாதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளதாக தெரிவித்த நீதிபதி, நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் இருந்து வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஏற்கனவே இதேபோல் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் மார்ச் 23ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"எந்த குற்ற நோக்கமும் இல்லாமல் ஒரு இடத்தில் கூடுவது சட்டவிரோதம் அல்ல" - சென்னை உயர்நீதிமன்றம்

Last Updated : Aug 6, 2022, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.