ETV Bharat / city

கரோனா தொற்றால் காவல் துறையில் தொடர் மரணங்கள்.. இதுவரை 108 போலீசார் உயிரிழப்பு..

author img

By

Published : May 20, 2021, 6:56 PM IST

கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியது முதல் தற்போதுவரை தமிழ்நாடு காவல் துறையில் 108 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்றால் காவல் துறையில் தொடர் மரணங்கள்..  இதுவரை 108 போலீசார் உயிரிழப்பு..
கரோனா தொற்றால் காவல் துறையில் தொடர் மரணங்கள்.. இதுவரை 108 போலீசார் உயிரிழப்பு..

கரோனா தொற்றின் தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டையே உருக்குலைத்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல்துறையினர் கரோனா நோய் தொற்றுக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தாண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் இதுவரை தமிழ்நாடு காவல் துறையில் 4 ஆயிரத்து 289 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 2 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 984 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியது முதல் தற்போதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு காவல் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக காவல் துறையினருக்கு தடுப்பூசி முகாம்கள் அமைத்து அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல 50 வயதுக்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பணிச்சுமையைக் குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை மட்டும் ஒரு லட்சத்து ஒரு ஆயிரத்து 137 காவல் துறையினரும், இரண்டு தடுப்பூசியையும் 69 ஆயிரத்து 477 காவல் துறையினரும் செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை 28 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் காவலர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்னும் 5 ஆயிரத்து 400 காவலர்கள் தடுப்பூசி போட வேண்டியுள்ளது.730 காவலர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் துறையினர் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. காவல் துறையில் ஏற்படும் இழப்பும் பாதிப்பும் அவர்களின் குடும்பத்தாரோடு மட்டும் நின்றுவிடாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கைகள் வலுத்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.