ETV Bharat / briefs

'இந்தி தெரியாது போடா எனக் கூறுவது, தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்றது' வேலூர் இப்ராஹிம்!

author img

By

Published : Sep 10, 2020, 10:41 AM IST

தூத்துக்குடி: இந்தி தெரியாது போடா எனக் கூறுவது வட மாநிலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு நீங்கள் மறைமுக எச்சரிக்கை விடுப்பது போன்றது என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Vellore Ibrahim Press Meet In Thoothukudi
Vellore Ibrahim Press Meet In Thoothukudi

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நலத் திட்டங்களையும், திட்ட பலன்களையும் மக்களிடையே எடுத்துச் சொல்லும் வகையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் சார்பில், மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் குமரி முதல் மெரினா வரை ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர், நேற்று(செப்.9) தூத்துக்குடி வந்த வேலூர் இப்ராஹிமுக்கு, தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், "பிரதமரையும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களையும் இழிவுபடுத்தி சில விஷமிகள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விஷமப் பரப்புரையை முறியடிக்கும் நோக்கில், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், திட்ட பலன்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குமரி முதல் மெரினா வரை யாத்திரை மேற்கொண்டுள்ளோம்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துள்ளன. கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அதையெல்லாம் மீறி தேச நலனுக்காக, தேச பக்தனாக இந்த யாத்திரையை முன்னெடுத்துள்ளோம். இந்த யாத்திரையை அமைதியான முறையில் முடித்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழ்நாடு அமைச்சர்களை விமர்சிக்கும் வகையில் ஒரு கருத்தினை பதிவிட்டார்.

அதை குறையாக எடுத்துக் கொண்டு கூட்டணியை உடைப்பது போன்ற விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது. தம்மிடம் உள்ள குறையை குறிப்பிட்டால் அந்தக் குறையை களைவதற்கான விமர்சனமாக மட்டுமே அதனை பார்க்க வேண்டும். சமீபத்தில் சமுக வலைதளங்களில் இந்தி தெரியாது போடா என்ற வசனத்துடன் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக மொழி உணர்வை ஏற்படுத்தி வருவதாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்பட பல்வேறு தலைவர்களும் கூறி வருகின்றனர். ஆனால், இந்தி என்பது இங்கு திணிக்கப்படுவதில்லை. இந்த நாட்டில் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்தி பேசக் கூடியவர்கள். அப்படியிருக்கையில், இந்தி தெரியாது போடா என்று சொல்லும்பொழுது, இந்தி தெரிந்தவர்களை நாம் அவமானப்படுத்துவதோடு இழிவுப்படுத்துவது போல உள்ளது.

மேலும்‌ ஏராளமான இந்தி தெரிந்த தமிழர்களும் அரசாங்க பதவியில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளனர். அவர்களையும் சேர்த்து நாம் அவமானப்படுத்துவது போன்று ஆகும். இதன்மூலம், வட மாநிலத்தில் இருக்கும் இந்தி தெரிந்த தமிழர்களுக்கு நீங்கள் மறைமுக அச்சுறுத்தல் விடுக்கிறீர்கள். இந்தி தெரியாது என கூறுபவர்களின் ஒரே நோக்கம் பிரதமரை எதிர்ப்பது, மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதாகும்.

எனவே இதையெல்லாம் விட்டுவிட்டு அறிவார்ந்த செயலை நீங்கள் செய்தால் அதற்கு அறிவார்ந்த பதிலை நாங்கள் தருகிறோம். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒரே வேலை மத்திய அரசைக் குறை கூறுவது மட்டும் தான். தேச நலனுக்கு எதிராக யார் கொள்ளை அடித்தாலும் அதை பார்த்துக்கொண்டு மத்திய அரசு சும்மா இருக்காது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.