ETV Bharat / briefs

'சுஷாந்தின் மரணம் கொலையாக இருக்கலாம்; சிபிஐ விசாரணை தேவை'

author img

By

Published : Jun 14, 2020, 9:12 PM IST

Updated : Jun 15, 2020, 6:36 AM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவரது உறவினர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sushant Singh Rajput's demise: Family alleges murder, demands CBI probe
Sushant Singh Rajput's demise: Family alleges murder, demands CBI probe

பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கை போச்சே, பிகே, தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி, சிச்சோர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இன்று காலை மும்பையில் உள்ள தனது வீட்டில் சடலமாகக் கிடந்தார்.

மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், சுஷாந்த்தின் மரணம் கொலையாக இருக்கலாம் என்பதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவரது உறவினர் ஆர்.சி. சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இது கொலை வழக்குதான். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என ராஜ்புத் மகாசபா சார்பிலும், எங்களது சார்பிலும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் கோரிக்கைவைக்கிறோம்" என்றார்.

முன்னதாக, சுஷாந்த்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியனும் தற்கொலை செய்துகொண்டார். இதனால் இவரது தற்கொலைக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து ஆர்‌.சி. சிங், "கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது மேலாளர் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவகாரத்தில் காவல் துறை தரப்பிலும், உள்ளூர் மக்கள் தரப்பிலும் அவர் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், சுஷாந்துடனான சில உரையாடல்களை நினைவுகூர்ந்த அவர், "தான் உச்சத்தை அடைய விரும்புவதாக சுஷாந்த் சிங் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்காக தான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சில சமயங்களில் அவர் தொடர்ந்து பதினெட்டு மணி நேரம் உழைத்துள்ளார்.

ஒருமுறை மாதுரி தீக்சித் நடுவராக இருந்த நடன நிகழ்ச்சியின்போது, அவருக்கு முதுகு வலி ஏற்பட்டிருந்தது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் நடனத்தைக் கைவிட மாட்டேன் என்று என்னிடம் கூறினார்" எனக் கண்ணீர் மல்க பேசினார்.

Last Updated : Jun 15, 2020, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.