ETV Bharat / briefs

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் வழக்கு பாயும் - எச்சரிக்கை விடுத்த கோவை ஆட்சியர்

author img

By

Published : Jun 19, 2020, 4:03 AM IST

கோவை: தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட ஆட்சியர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Covid-19 spread: follow the rules or otherwise get read for punishment- covai collector
Covid-19 spread: follow the rules or otherwise get read for punishment- covai collector

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கோவை மாவட்டத்தில் இதுவரை 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. இருப்பினும், கோவையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இச்சூழலில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ன. மே மாதம் இறுதி வரை கரோனா பாதிப்பு முழுமையாக இல்லாமல் இருந்த நிலையில், ஜீன் முதல் வாரம் முதல் விமானம், இரயில், சாலை மார்க்கமாக வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மூலம் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

விமானம் மூலம் வருபவர்களுக்கு விமான நிலையத்திலும், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்குச் சோதனைச் சாவடிகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பரிசோதனை செய்ததில் 187 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜீன் மாதத்தில் மட்டும் 41 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 938 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எவ்வித காரணங்களுக்காவும் வெளியில் வரக்கூடாது. மீறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கோவையில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் 9.55 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் நுழைபவர்கள், வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதியன்று கரோனா பாதிப்பால் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவை மக்களிடையே கரோனா குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.