ETV Bharat / briefs

ஆக்கிரமிப்புக்கு உள்ளான வாய்க்கால்கள் - நிலம் அளித்து உதவிய விவசாயிகள்

author img

By

Published : Jun 23, 2020, 12:20 PM IST

தஞ்சாவூர் : கிராம ஏரியில் தண்ணீர் நிரப்பி விவசாயத்தை மேம்படுத்த, தாமாக முன் வந்து தங்கள் சொந்த நிலங்களை வழங்கிய குறு விவசாயிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Occupation of the Thanjavur drain
Occupation of the Thanjavur drain

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகிலுள்ள தென்னங்குடி கிராமம் முற்றிலும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமம் ஆகும். இக்கிராமம் அம்மாவட்டத்தின் கடைமடைப் பகுதியாக உள்ளது.

இந்நிலையில், பேராவூரணியைச் சேர்ந்த கைஃபா எனும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ”தென்னங்குடி பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நீர் நிரப்பினால் அக்கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஆத்தாளூர் உள்ளிட்ட பிற கிராமங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு விவசாய நிலங்களும் பயன்பெறும்.

எனவே அந்த ஏரியில் முழு கொள்ளளவு நீர் நிரப்பும் வகையில் கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் தென்னங்குடி கிராம இளைஞர்கள் கைஃபா அமைப்பினரை நாடினர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்ற கைஃபா அமைப்பினர், ஏரிக்கு வரும் வாய்க்கால்களை தூர்வார முன்னோட்டமாக ஆய்வு செய்த போது அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரிந்தது.

இதனால் வாய்க்கால்களைத் தூர்வார முடியாமலும் தண்ணீர் கொண்டு வர முடியாமலும் போனது. இந்நிலையில், தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தா வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து தங்களது கிராம மக்களிடம் இது குறித்து விளக்கியதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் எட்டு பேர் தாமாக முன்வந்து தங்களுக்கு சொந்தமான வாய்க்கால்கள் இருந்த இடங்களை அளித்துள்ளனர்.

மேலும் இதனால் தங்கள் கிராமமும், பக்கத்து கிராமமும் நல்ல விளைச்சலைப் பெற்று மக்கள் அனைவரும் செழிப்பாக இருக்க வேண்டும் என்றும் நிலங்களை அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த எட்டு பேருக்கும் கிராம மக்களும் கைஃபா அமைப்பினரும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதுபற்றி பேசிய கைஃ பா அமைப்பின் செயலாளர் பிரபாகரன் ”இது போன்று பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் இன்னும் பல கிராமங்களில் நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாயத்தை மேம்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.