ETV Bharat / briefs

நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

author img

By

Published : Sep 3, 2020, 6:25 AM IST

மதுரை: நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் இருவர் தங்களின் உண்மைச் சான்றிதழ்களை வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madras High Court Madurai Branch
Madras High Court Madurai Branch

சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்நிலையில், அந்த மாணவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியாக சேர்த்து விசாரித்தனர். இந்த வழக்கில் பல்வேறு மாணவர்களும், பெற்றோர்களும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி நான் ஜாமீனில் உள்ளேன்.

இவ்வழக்கு விசாரணையின்போது எனது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்று மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில், தற்போது நீதித்துறை நடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தோடு, இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது, எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரியில் இணைந்து கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர சென்ற நிலையில், உண்மைச் சான்றிதழ்களை கேட்கின்றனர். எனவே எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் இருக்கும் உண்மை சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும். இதில், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற தயாராக உள்ளேன்"என கூறியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, மற்றொரு மாணவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நேற்று(செப்.2) நீதிபதி பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில்," மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என வாதிட்டனர்.

அதற்கு நீதிபதி, "தவறான வழியில் மாணவர்கள் மருத்துவ இடங்களை பெற முயற்சி செய்துள்ளனர். இதன் காரணமாக 7 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. கடினமாக உழைத்த பலரும் மருத்துவ இடங்கள் கிடைக்கப்பெறாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நீட் தேர்வில் தோல்வியடைந்த அனிதா உயிரிழந்த நினைவு தினம் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது" எனக் குறிப்பிட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.