ETV Bharat / briefs

கோவிட்19 சிகிச்சைக்கு கூடுதல், படுக்கை வசதிகள் தயார்- மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தகவல்

author img

By

Published : Jul 23, 2020, 7:40 PM IST

புதுக்கோட்டை: மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் கோவிட்19 சிகிச்சைக்கு கூடுதல், படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கோவிட்19 சிகிச்சைக்கு கூடுதல், படுக்கை வசதிகள் தயார்- மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி
கோவிட்19 சிகிச்சைக்கு கூடுதல், படுக்கை வசதிகள் தயார்- மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (ஜூலை23) மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் மருத்துவத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து, தொடர்புடைய அலுவலர்களுடன் இன்றையதினம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்காக அறந்தாங்கி தலைமை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளும், 12 தாலுகா அரசு மருத்துவமனைகளில் 123 படுக்கைகளும், 13 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 195 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 121 படுக்கைகள் என மொத்தம் ஆயிரத்து 739 படுக்கை வசதிகள் கோவிட்-19 சிகிச்சைகளுக்காக தயார் நிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அரசு இராணியார் மருத்துவமனை, டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் 608 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக மொத்தம் உள்ள ஆயிரத்து 739 படுக்கைகளில் 608 நோயாளிகள் மட்டும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்பொழுது 1131 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடு நடவடிக்கையாக குடுமியான்மலை வேளாண்மை பல்கலைகழகத்தில் அமைந்துள்ள ஸ்டாமினில் 150 படுக்கைகளும், புதுக்கோட்டை குடிசைமாற்று வாரிய வளாகத்தில் 1,000 படுக்கைகளும், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கைகளும் என மொத்தம் ஆயிரத்து 250 படுக்கை வசதிகள் தயார் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாள்களை கருத்தில் கொண்டு கோவிட் சிகிச்சைக்கென மாவட்டத்தில் உள்ள 121 சமுதாய கூடங்களில் ஆயிரத்து 319 படுக்கைகளும், 27 மாணவர் விடுதிகளில் 434 படுக்கைகளும், 121 திருமண மண்டபங்களில் 2 ஆயிரத்து 995 படுக்கைகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 748 படுக்கைகள் அமைத்து சிகிச்சை வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.