ETV Bharat / bharat

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் தாக்கல்; மூன்றில் ஒரு பங்கு இனி பெண்களுக்கு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 10:14 PM IST

Women's Reservation Bill 2023: நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 2023 தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் டெல்லி சட்டசபை ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்த அரசியலமைப்பு (128 திருத்தம்) மசோதா 2023 மக்களவையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

womens reservation bill 2023 introduced in lok sabha; reserve seats in assembly for women
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் தாக்கல்

டெல்லி: நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் டெல்லி சட்டசபை ஆகியவற்றில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான மசோதா மக்களவையில் இன்று (செப்.19) பட்டியலிடப்பட்டது. அரசியலமைப்பு (128 திருத்தம்) மசோதா 2023 மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பட்டியலிடப்பட்ட முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய மற்றும் மாநில அளவில் பெண்கள் தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘விகாசித் பாரத்’-படி இந்தியாவை 2047-இல் வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கிற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று.

அதனை நிறைவேற்றும் விதமாக இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமையும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, 15 ஆண்டுகள் தொடரும் என எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்களும் சுழற்சி செய்யப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

மசோதா நிறைவேற்ற நான்கு முக்கிய காரணங்கள்: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது 2047ஆம் ஆண்டு வளர்ந்த நாடாக இந்தியா மாற்றம் பெற விகாசித் பாரத் இலக்குடன் அமிரித் தகாலம் நோக்கி பயணம் தொடங்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கான இலக்கை அடைய சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் ஆகியவை செயல்படுத்த அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. இதற்கு மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்களின் பங்கு முக்கியமானது என்று மசோதா தெரிவித்துள்ளது.

பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் மூலம் நாரி சக்தியை முன்னணிக்கு கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக பெண்களின் நிதி சுதந்திரத்தில் கணிசமான முன்னேற்றம் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் சமமான அணுகல் கிடைக்கும். அரசு, பெண்கள் வளர்ச்சிக்காக உஜ்ஜவாலா யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன் மூலம் கழிப்பறை வசதி, முத்ரா யோஜ்னா மூலம் தொழிலுக்கான கடன் உதவி போன்றவைகளை வழங்கி உள்ளது. ஆனால், உண்மையான முன்னேற்றம் என்பது, அவர்களும் அதிகாரம் பெறுவதில்தான் உள்ளது. பெண்களின் முடிவெடுக்கும் திறன், அவர்களின் கருத்துக்கள் அவையின் விவாதங்களுக்கு முக்கியமானவை.

பஞ்சாயத்து மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. ஆனால் அதே வேளையில், மாநில சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் அவர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே உள்ளது. மாநில மற்றும் தேசிய அளவில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்குவதும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையாகும். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2010-ஆம் ஆண்டு, ராஜ்யசபாவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டபோது, லோக்சபாவில் அதை நிறைவேற்ற முடியாமல் போனது.

மாநில மற்றும் தேசிய அளவில் கொள்கை வகுப்பதில் பெண்கள் மக்களின் பிரதிநிதியாக அதிக அளவில் பங்கேற்பதற்காக, சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை வழங்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தத்திற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் தேசிய தலைநகரான டெல்லியின் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு என இடம் ஒதுக்கப்பட வேண்டும் என மசோதாவில் அதன் பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Aditya L1: சூரியனின் எல்1 புள்ளியை நோக்கிய பயணத்தில் ஆதித்யா எல்1!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.