ETV Bharat / bharat

மோர்பி தொங்கு பால விபத்துக்கு யார் காரணம்? - ஓர் பார்வை!

author img

By

Published : Oct 31, 2022, 9:51 PM IST

அதிக பாரம் ஏற்றப்பட்டதன் காரணமாகவே மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. தகுதிச் சான்றிதழின்றி பாலம் திறக்கப்பட்டதாக மோர்பி நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.

who
who

குஜராத்தில் நேற்று(அக்.30) மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றாண்டு பழமையான இந்தப் பாலம் அண்மையில்தான் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில், பாலம் எப்படி இடிந்தது? அதற்கான காரணம் என்ன? இந்த விபத்துக்கு யார் பொறுப்பு? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கான பதிலை தேடும் முயற்சியாக, இந்த சம்பவத்தை விரிவாக ஆய்வு செய்ய ஈடிவி பாரத் ஊடகம் முயற்சித்துள்ளது.

மோர்பி பாலம்:அக்.30 ஞாயிற்றுக்கிழமை மோர்பி பாலத்தைக்காண 400-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். குறிப்பாக மோர்பியில் வசிப்பவர்கள் அதிகளவு வந்தனர். மக்களின் கூட்டத்தால், எடை தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்ததாகத்தெரிகிறது. இதில் 56 குழந்தைகள் உள்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நூற்றாண்டு பழைய பாலம்: இந்த கேபிள் பாலம் 142 ஆண்டுகள் பழமையானது. மும்பை ஆளுநராக இருந்த ரிச்சர்ட் டெம்பிள் 1879ஆம் ஆண்டு இந்தப்பாலத்தை அர்ப்பணித்தார். அப்போது, சுமார் 3.5 லட்சம் ரூபாய் செலவில் இந்தப்பாலம் கட்டப்பட்டது. தர்பார் கர் மற்றும் நாசர்பாக்கை இணைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது.

தொங்கு பாலம் மறுசீரமைப்பு: பாலம் சேதமடைந்திருந்ததால் தற்காலிகமாகப்பயன்பாடு நிறுத்தப்பட்டது. பிறகு, கடந்த 6 மாதங்களாக சீரமைப்புப்பணிகள் நடந்தன. இதற்காக சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டது. ஜிண்டால் நிறுவனம் இந்த தொங்கு பாலத்தை புதுப்பிப்பதற்கான முதன்மைப்பொருளைத் தயாரித்தது. அதாவது, ஒரு இலகுரக அலுமினியத் தாளை தயாரித்தது.

தகுதிச் சான்றிதழின்றி பாலம் திறப்பு: சீரமைக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் பயன்படுத்த வலிமையுடன், தகுதியுடன் இருக்கிறதா? என்ற சான்றிதழைப்பெறாமலேயே இந்தப் பாலம் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதாக மோர்பி நகராட்சியின் தலைமை அலுவலர் சந்தீப்சிங் தெரிவித்தார். பாலம் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருள், அதன் தாங்கும் திறன் உள்ளிட்டவை குறித்து சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் நகராட்சிக்கு தெரிவிக்கவில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் கூற்றுப்படி பாலம் 15 ஆண்டுகள் வரை தாங்கும். ஆனால், மக்கள் பயன்பாட்டுக்குத்திறக்கப்பட்ட 4ஆவது நாளில் பாலம் இடிந்துவிட்டது.

குற்றவாளிகள் தப்ப முடியாது: இந்தச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோர்பி சரக ஐஜி, அசோக் யாதவ் தெரிவித்தார். சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு ஏற்கெனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எப்ஐஆரில் குற்றவாளிகளின் அடையாளங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; குற்றவாளிகள் மக்கள் முன்பு பகிரங்கப்படுத்தப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாலத்தின் திறனை மதிப்பிடுவது முக்கியம்: எந்தவொரு புதிய பாலத்தைத் திறப்பதற்கு முன்பும், அதனை சோதனை மற்றும் மதிப்பீடு செய்வது மிக முக்கியம். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான் அதற்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தகுதிச் சான்றுக்கான அளவுகோள் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப மாறுபடும்.

குஜராத் இன்ஸ்டிடியூட் ஆப் சிவில் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வத்சல் படேல் கூறுகையில், "எந்தவொரு கட்டடம், பாலம் அல்லது பொழுதுபோக்கு பூங்காவிற்கும் தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும். நகராட்சி நிர்வாகம் அல்லது மாநிலத்தின் R&D துறை பல்வேறு கோணங்களில் முழு கட்டுமானத்தையும் ஆய்வு செய்கிறது. அதன் பிறகே தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும். அதேபோல், பாலத்தின் தாங்கும் திறனை கட்டுமானத்தை வடிவமைப்பதற்கு முன்பு மட்டுமே நிர்ணயிக்க முடியும். அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவு, வலிமை உள்ளிட்டவற்றைப் பொருத்து நிர்ணயிக்கலாம்’ என்றார்.

யார் பொறுப்பு?: பாலத்தின் திறன்படி அதில் ஒரே நேரத்தில் 100 பேர் செல்லலாம். ஆனால், விபத்து நடந்தபோது சுமார் 400 பேர் பாலத்தில் இருந்துள்ளனர். புள்ளி விவரங்களின்படி நான்கு நாட்களில் 12,000 பேர் பாலத்தை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் இதற்கு யார் காரணம்?

OREVA குழும ஒப்பந்தம்: தொங்கு பாலத்தின் நிர்வாகப்பொறுப்பை, கடந்த மார்ச் மாதம் OREVA குழும நிறுவனமான அஜந்தா நிறுவனத்திடம் நகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது. 15 ஆண்டுகளுக்குப் பாலத்தை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அஜந்தா நிறுவனம் பார்வைக் கட்டணத்தை நிர்ணயித்தது. அதேபோல், பாலத்தின் எந்தவொரு செலவினங்களையும் ஈடுகட்ட வேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு என ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாநகராட்சி மற்றும் மோர்பி நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

OREVA கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனம்: இந்த பாலத்தைக் கட்டிய OREVA நிறுவனம் ஒரு கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இது ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனம் ஆகும். வணிக நோக்கமின்றி பாலத்தின் கட்டுப்பாட்டை ஏற்றதாக கூறப்படுகிறது. OREVA குழுமத்திற்கு இதற்கு முன்பு முன் பால மேலாண்மையில் அனுபவம் இல்லை.

38 ஆண்டுகளுக்கு முன்பு டிக்கெட் விலை: 38 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பாலத்தைப் பயன்படுத்த 15 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாதத்திற்கு 2 ரூபாய். இன்று இந்த கேபிள் பாலத்தை கடக்க 17 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழு அமைப்பு: மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை குஜராத் அரசு நியமித்துள்ளது. இதில், நகராட்சி நிர்வாக ஆணையர் ராஜ்குமார் பெனிவால், ஆர் & டி பிரிவு தரக் கட்டுப்பாடு தலைமைப் பொறியாளர் படேல், அகமதாபாத் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் கோபால், சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறை செயலாளர் சந்தீப் வாசவா, குற்றப்பிரிவு ஐஜி திரிவேதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: குஜராத் மோர்பி பாலம் அறுந்து விழுந்த காட்சி....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.