கரோனாவை விட கொடூர தொற்று தாக்கும் அபாயம்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

author img

By

Published : May 25, 2023, 10:03 PM IST

WHO

கரோனா பெருந்தொற்று உலக சுகாதார அவசர நிலையில் இருந்துதான் நீக்கப்பட்டு உள்ளதாகவும், அதை விட பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்தார்.

ஐதராபாத் : கரோனாவை விட கொடூரமான நோய்த் தொற்று தாக்கும் அபாயம் நிலவுவதாகவும் உலக நாடுகள் மற்றொரு பெருந்தொற்றை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்து உள்ளார்.

75வது உலக சுகாதார சபையின் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், கரோனாவை விட கொடிய தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தயார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து உள்ளார். கரோனா பெருந்தொற்று இனி உலகளாவிய சுகாதார அவசரநிலை அல்ல என அண்மையில் டெட்ரோஸ் அதோனம் அறிவித்து இருந்தார்.

இதனால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்திற்குள், இடியை போன்றதொறு செய்தியை உலக நாடுகளின் தலையில் டெட்ரோஸ் அதோனம் இறக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக சுகாதார சபையின் கூட்டத்தில் அறிக்கையை சமர்பித்த டெட்ரோஸ் அதோனம், கரோனா பெருந்தொற்று உலக சுகாதார அவசர நிலையில் இருந்துதான் நீக்கப்பட்டு உள்ளதாகவும் இன்னமும் மனித குலத்துக்கான அச்சுறுத்தல் என்ற நிலையில் இருந்து நீக்கப்படவில்லை என்றார்.

2018ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய முன்னுரிமை அளிக்கப்பட்ட நோய்கள் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் வரும் காலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

இதில் பெரும்பாலான தொற்றுகள், ஏற்கனவே பரவியது மற்றும் மக்கள் அறிந்த நோய்களாக காணப்படுகின்றன. ஜிகா வைரஸ், எபோலா, சார்ஸ் உள்ளிட்ட நோய்க் கிருமிகளின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இந்நிலையில் அந்த பட்டியலில் Disease X என்ற நோய்க் கிருமியின் பெயர் இடம் பெற்று உள்ளது.

இந்த Disease X என்ற நோய்க் கிருமி, சர்வதேச அளவிலான பெருந்தொற்றாக மாறக் கூடிய வகையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், Disease X கொடிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திரிபுகளாக எதிர்காலத்தில் உருவெடுக்கும் என்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ் திரிபுகளாகவும் மாறி பெரிய அலையை உருவாக்கலாம் என்றார் .

எந்தவிதமான அவசரநிலையையும் சமாளிக்கக்கூடிய வகையில் உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அடுத்த பெருந்தொற்று உருவாவதற்குள் அதை எதிர்கொள்ள அனைவரும் ஓரணியில் தயாராக இருக்க வேண்டும் என்றார். அதற்கு தேவையான மருத்துவ உள்கட்டமைப்புகள், உபகரணங்கள், தேவையான சுகாதார முன்களப் பணியாளரகள் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க : Niti Aayog : பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! முக்கிய ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.