ETV Bharat / bharat

திருச்சூர் போன திருச்சி யானை... ஆசியாவின் மிக உயரமான யானையின் அறியப்படாத சரித்திரம்

author img

By

Published : Aug 18, 2022, 8:19 PM IST

Updated : Aug 18, 2022, 8:30 PM IST

கேரளாவில் 1900களின் முற்பகுதியில் வாழ்ந்த ஆசியாவின் மிக உயரமான யானையான செங்களூர் ரங்கநாதனின் பிரமாண்ட எலும்புக்கூடு, திருச்சூர் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்திலிருந்து கேரளா சென்ற சுவாரஸ்யமான பின்னணியினை இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

skeleton
skeleton

திருச்சூர்(கேரளா): "செங்களூர் ரங்கநாதன்" என்பது ஆசியாவின் மிக உயரமான யானை. இது 1900-களின் முற்பகுதியில் கேரளாவில் கோயில் திருவிழாக்களில் முக்கிய ஈர்ப்பாக இருந்தது. இந்த பிரமாண்ட யானையை குறித்து விரிவாக காண்போம்...

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பெருமாளுக்கு சேவை செய்வதற்காக ஒரு குட்டி யானை கொண்டு வரப்பட்டது. அதற்கு "ரங்கநாதன்" என்று பெயர் வைக்கப்பட்டது. ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வளர்ந்து வந்த அந்த யானை, அபிஷேகத்திற்காக தினமும் காவிரி ஆற்றிலிருந்து கலசத்தில் தண்ணீர் கொண்டு வரும்.

குட்டி யானையாக கோயிலுக்கு வந்த ரங்கநாதன், கிடுகிடுவென அசுரன் போல வளர்ந்து நின்றான். அவனது வளர்ச்சி பிற யானைகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமாக இருந்தது. 11 அடி 4 அங்குல உயரத்தில் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் காட்சியளித்தான்.

இந்த அசுர வளர்ச்சி அவனுக்கு இடையூறாகவும் இருந்தது. கோயில் வாசலுக்குள் சென்று வர மிகவும் சிரமப்பட்டான். அவ்வாறு கஷ்டப்பட்டு வாயிலுக்குள் சென்று வரும்போது கற்கள் உராய்ந்து காயங்கள் ஏற்பட்டன. அவனைப் பராமரிக்க முடியாமல் திணறிய கோயில் நிர்வாகம், கடந்த 1905ஆம் ஆண்டு ரங்கநாதனை விற்பனை செய்ய முடிவு செய்து விளம்பரம் கொடுத்தது.

அதன்படி, கேரளா மாநிலம், செங்களூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் நம்பூதிரி என்பவர் ரங்கநாதனை ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து வாங்கிச்சென்றார். ரங்கநாதனை செங்களூர் அழைத்துச்சென்ற அவர், சத்தான உணவு கொடுத்து ரங்கநாதனை நன்றாகப் பராமரித்தார்.

பூரிப்புடன் வளர்ந்த ரங்கநாதனை, நம்பூதிரி கடந்த 1906ஆம் ஆண்டு நடந்த திருச்சூர் ஆடிப்பூரத் திருவிழாவில் நிற்க வைத்தார். ராட்சத உருவம் கொண்ட அவனுக்கு அருகில் நின்ற யானைகள் அனைத்தும் குட்டிகளாக தோன்றின. கோயில் ஊர்வலத்தில் கடவுளின் சிலையை சுமக்கும் முக்கிய யானையாக ரங்கநாதன் மாறினான்.

அவனது பிரமாண்ட உருவத்தைக் கண்டு திகைத்த மக்கள், உற்சாகத்துடன் அவனை கொண்டாடத் தொடங்கினர். அதன் பிறகு பல ஆண்டுகள் யானைகளின் நாயகனாகவும், மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவனாகவும் ரங்கநாதன் வலம் வந்தான். அவனது புகழ் உலகெங்கும் பரவியது. அவனைக் காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் 'கேரள ஆடிப்பூரம்' திருவிழாவைக் காண குவிந்தனர்.

திருச்சூர் போன திருச்சி யானை... ஆசியாவின் மிக உயரமான யானையின் அறியப்படாத சரித்திரம்

இந்த நிலையில், கடந்த 1914ஆம் ஆண்டு யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் ரங்கநாதனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் பலனில்லை. கடந்த 1917ஆம் ஆண்டு ரங்கநாதன் உயிரிழந்தான்.

யானைகளில் அவன் ஒரு அதிசயப் பிறவி என்பதால், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம், அவனது எலும்புக்கூட்டை லண்டன் மியூசியத்தில் வைக்க முடிவு செய்தது. அதன்படி, ரங்கநாதன் உடலைப் பக்குவப்படுத்தி, எலும்புகளை எடுத்துக் கோர்த்து, நிற்க வைத்தனர்.

அந்த ராட்சத எலும்புக்கூட்டைப் பார்க்கும்போது, ரங்கநாதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்து நிற்பதுபோல தோன்றியதாக மக்கள் கூறினர். நாட்டிலேயே ஒரு நுண்ணிய எலும்பு கூட தவறவிடாமல் முழுமையாக கோர்க்கப்பட்ட ஒரே யானையின் எலும்புக்கூடு ரங்கநாதனுடையதுதான்.

அத்தகைய பெருமைக்குரிய ரங்கநாதனின் எலும்புக்கூடு தங்களிடமே இருக்கட்டும் என அப்போதைய மெட்ராஸ் மாநகராட்சி அலுவலர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் திருச்சூர் அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் ரங்கநாதனின் எலும்புக்கூடு காட்சிப்படுத்தப்பட்டது.

இன்றும் திருச்சூர் அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறான் "செங்களூர் ரங்கநாதன்"...

இதுகுறித்து திருச்சூர் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் அனில் குமார் கூறுகையில், "எலும்புக்கூட்டைப் பார்த்தாலே தெரியும். ரங்கநாதனின் உயரம் எவ்வளவு என்று. அதைப் பார்க்கும்போது அவனது பிரமாண்ட உருவத்தை நம்மால் கற்பனை செய்ய முடியும்.

கோயில் திருவிழாக்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், பிற யானைகளுடன் நிற்கும்போது ரங்கநாதனின் உருவம் எத்தகையது என்பதைப் பார்க்கலாம். இந்த எலும்புக்கூட்டை மிகுந்த கவனத்துடன் பராமரித்து வருகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:பள்ளி, கல்லூரிகளில் தேசிய கீதம் கட்டாயம்

Last Updated : Aug 18, 2022, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.