ETV Bharat / bharat

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்: அம்ரித் பால் சிக்கியது எப்படி?

author img

By

Published : Apr 23, 2023, 7:18 PM IST

போலீசாரின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகி இருந்த காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அவர் சிக்கியது எப்படி?

Etv Bharat
Etv Bharat

சண்டிகர்: காலிஸ்தான் தனி நாடு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தவர் 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங். தலைமறைவாகி இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 23) காலை சுற்றிவளைக்கப்பட்டார். குருத்வாராவில் இருந்தபோது அப்பகுதியை போலீசார் சுற்றிவளைத்ததால், வேறு வழியின்றி அம்ரித் பால் சரணடைந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஐஜி சுக்செயின் சிங் கூறுகையில், "பஞ்சாப்பின் மோகா மாவட்டம், ரோட் பகுதியில் இருக்கும் குருத்வாராவில் அம்ரித்பால் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அமிர்தசரஸ் போலீசார் மற்றும் பஞ்சாப் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் உடனடியாக ரோட் கிராமத்துக்குச் சென்றனர். அம்ரித் தப்பிச் செல்லாதபடி கிராமம் முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், புனிதம் கருதி குருத்வாராவுக்குள் போலீசார் செல்லவில்லை. அப்போதே, இனி நம்மால் தப்பிக்க முடியாது என அம்ரித்பால் நினைத்திருப்பார். அதன்பிறகு குருத்வாராவில் இருந்து வெளியே வந்த அவரை, போலீசார் சுற்றிவளைத்தனர். ஏற்கனவே அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 6.45 மணியளவில் அம்ரித் கைது செய்யப்பட்டார்" என கூறினார்.

அம்ரித்பால் விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன? என்பதைப் பார்ப்போம்.

செப்டம்பர் 29, 2022: காலிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி வந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேயின் தீவிர ஆதரவாளர் தான், அம்ரித் பால். நடிகர் தீப் சித்து உருவாக்கிய 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவராக கடந்த 2022 செப்டம்பர் 29ம் தேதி பொறுப்பேற்றார். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

பிப்ரவரி 23, 2023: அம்ரித்தின் ஆதரவாளர் லவ்ப்ரீத் சிங் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுக்கக் கோரி அஜ்னாலா காவல் நிலையம் முன் அம்ரித்பால் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் மோதல் வெடித்தது. பலர் காயம் அடைந்தனர்.

பிப்ரவரி 24: கைது செய்யப்பட்ட லவ்ப்ரீத்தை போலீசார் விடுவித்தனர்.

மார்ச் 18: அம்ரித்பாலை போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பினார்.

மார்ச் 19, 21: அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் கால்சி, பசந்த் சிங், குர்மீத் சிங், பக்வந்த் சிங், ஹர்ஜித் சிங், குல்வந்த், குரீந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் 23: ஹரியானா மாநிலம், குருசேத்திராவில் அம்ரித்பால் தங்குவதற்கு வீடு வழங்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

ஏப்ரல் 15: அம்ரித் பாலின் மற்றொரு கூட்டாளி ஜோகா சிங்கை போலீசார் கைது செய்தனர்.

ஏப்ரல் 20: லண்டன் செல்ல முயன்ற அம்ரித் பாலின் மனைவி கிர்னாதீப் கவுர், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையும் படிங்க: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - சீன, ரஷ்ய அமைச்சர்கள் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.