அமெரிக்காவில் 2 தெலுங்கு மாணவர்கள் உயிரிழப்பு! என்ன நடந்தது?

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 15, 2024, 12:15 PM IST

Etv Bharat

2 Telugu students die in US: உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற இரண்டு தெலுங்கு மாணவர்கள் இரவில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது உயிரிழந்ததாக அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வனபர்த்தி : தெலங்கானா மாநிலம் வனபர்த்தி டவுனை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்ற இளைஞர் உயர் கல்விக்காக கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அமெரிக்கா சென்று உள்ளார். அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் பல்கலைக்கழகத்தில் தினேஷ் படித்து வந்து உள்ளார்.

தினேஷுடன், ஆந்திர மாநிகம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த மாணவரும் இணைந்து படித்து வந்து உள்ளார். இருவரும் ஒரே இடத்தில் தங்கி உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு தூங்கிக் கொண்டு இருக்கும் போது விஷவாயு தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் எப்படி விஷவாயு கசிவு ஏற்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் இல்லை எனக் கூறப்படுகிறது. தினேஷ் இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வனபர்த்தி டவுன் பகுதியில் தினேஷின் பெற்றோர் கட்டு வெங்கன்னா, லாவண்யா தம்பதி வசித்து வருகின்றனர்.

உயர் கல்விக்காக மகன் அமெரிக்கா சென்று 17 நாட்களே தாண்டிய நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உயிரிழந்த தினேஷின் பெற்றோரை சந்தித்த வனபர்த்தி எம்.எல்.ஏ மேகாரெட்டி, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் பேசி மகனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர போதிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.

மற்றொரு மாணவர் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் தூங்கிக் கொண்டு இருக்கும் போது விஷவாயு தாக்கியதாக கூறப்படும் நிலையில், எப்படி விஷவாயு வெளியேறியது என்பது புதிராகவே உள்ளது. உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : இண்டிகோ விமானி மீது தாக்குதல்! என்ன காரணம்? வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.