ETV Bharat / bharat

இந்தியாவில் பிபிசிக்கு தடை கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By

Published : Feb 10, 2023, 2:25 PM IST

இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

டெல்லி: கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனம், அதில் அப்போதைய குஜராத் முதலமைச்சரான பிரதமர் மோடிக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தது. இந்த சம்பவம் பெரும் பூதாகரத்தைக் கிளப்பிய நிலையில், நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும் தனக்கு உள்ள அதிகாரத்தைக் கொண்டு பிபிசியின் ஆவணப் படத்தைத் திரையிடத் தடை விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியது. தடையை மீறி எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாணவ அமைப்பினர் பிபிசி ஆவணப் படத்தைத் திரையிட்டதால் பல்வேறு இடங்களில் மோதல் சம்பவங்கள் அரங்கேறின.

இந்நிலையில், பிபிசி ஆவணப் படத்திற்கும், இந்தியாவில் பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கக் கோரி, இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா மற்றும் விவசாயி பிரேந்திர குமார் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், "மனு முற்றிலும் தவறானது என்றும் உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தனர். மேலும் ஒரு ஆவணப் படம் நாட்டை எவ்வாறு பாதிக்கும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த மனு தவறானது என்று தெரிவித்தனர். மேலும் மனுதாரரின் கோரிக்கையின் படி உத்தரவைப் பிறப்பிக்க முடியாது" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: உலகில் முதல் முறையாக எச்ஐவி பாதித்த தம்பதிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.