ETV Bharat / bharat

Modi defamation case: மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கு : ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு ஜூலை 21ல் விசாரணை!

author img

By

Published : Jul 18, 2023, 12:46 PM IST

மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக வரும் 21ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

Modi defamation case
ராகுல்காந்தி

டெல்லி: ராகுல்காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவதாக கூறி விமர்சித்திருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது பாஜகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ப மீண்டும் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி, ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ராகுல்காந்தி மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, உடனடியாக ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல்காந்தி மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். கடந்த 7ஆம் தேதி இந்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 18) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி, "ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு சுதந்திரமான பேச்சு, சுதந்திரமான கருத்து, சுதந்திரமான சிந்தனை ஆகியவற்றைத் ஒடுக்க வழிவகுக்கும். இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதற்கு சமமாகும். அது நாட்டின் அரசியல் சூழலுக்கும் எதிர்காலத்திற்கும் மிகவும் தீங்கானது. தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்" என்று கூறினார். இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு வரும் 21ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவை தோற்கடிக்க போகிறது" - ராகுல்காந்தி விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.