ETV Bharat / bharat

பத்திரிகையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல அனுமதி!

author img

By

Published : Apr 4, 2022, 7:48 PM IST

பத்திரிகையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு காரணமாக, மும்பை விமான நிலையத்தில் ராணா அயூப் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ராணா அயூப்
ராணா அயூப்

மும்பையைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான ராணா அயூப், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பொதுமக்களிடமிருந்து பணம் வாங்கி, தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்காக அதை வேறு கணக்குக்கு மாற்றியதாக கூறி, ராணா அயூப் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு பதிவு செய்தது. அவரது 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் முடக்கியது.

இந்நிலையில், ராணா அயூப் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையத்தில் (ICFJ) உரையாற்ற, லண்டன் செல்வதற்காக கடந்த 29ஆம் தேதி, மும்பை விமான நிலையம் சென்றார். அங்கு குடியுரிமை அலுவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராணா அயூப் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திர தரி சிங் (Chandra Dhari Singh) முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராணா அயூப் நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ராணா அயூப் வெளிநாட்டில் தங்கும் இடம், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராணா அயூப் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.