ETV Bharat / bharat

கொட்டும் மழையில் கொண்டாடப்பட்ட புதுச்சேரி விடுதலை தினம்

author img

By

Published : Nov 1, 2022, 11:53 AM IST

புதுச்சேரியின் விடுதலை தினத்தை கொட்டும் மழையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி கொண்டாடினார்.

கொட்டும் மழையில் கொண்டாடப்பட்ட புதுச்சேரி விடுதலை தினம்
கொட்டும் மழையில் கொண்டாடப்பட்ட புதுச்சேரி விடுதலை தினம்

புதுச்சேரி: பண்டைய காலத்தில் வேதபுரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி பகுதிகளை, பிரெஞ்சுக்காரர்கள் 254 ஆண்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 7 ஆண்டுகள் கழித்து 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று சுதந்திரம் பெற்றது.

ஆனாலும் முழுமையான அதிகார மாற்றம் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதிதான் கிடைத்தது. அதனால் முழு அதிகார மாற்றம் நிகழ்ந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்களது சுதந்திர தினமாக கொண்டாடி வந்தது, புதுச்சேரி அரசு. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்களும், புதுச்சேரி பிரெஞ்சு இந்திய மக்களும் நவம்பர் 1ஆம் தேதியே புதுச்சேரியின் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

புதுச்சேரியின் விடுதலை தினத்தை கொட்டும் மழையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி கொண்டாடினார்

இவர்களின் தொடர் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட அப்போதைய என்ஆர் காங்கிரஸ் அரசு, 2014ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவித்தது. மேலும் விடுதலை நாளான நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி அன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ 1) புதுச்சேரி அரசின் சார்பில் விடுதலை நாள் விழா கடற்கரை காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, காலை 8.55 மணிக்கு கொட்டும் மழையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி விடுதலை தின உரையாற்றினார். அப்போது, “புதுச்சேரியில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 37,000 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 39,000 கோடியாக உயரம் என மதிப்பு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் 1,056 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பிட மாபெரும் பணி நியமன இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி-தமிழ்நாட்டிற்கு இடையேயான பகுதிகளுக்கிடையே உள்ள கடலரிப்பிற்கு தீர்வு காண முழுமையான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள தேசிய கடலோர ஆய்வு மையம் முன் வர வேண்டும்.

நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 16,769 முதியோருக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநில கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விடுதலை தின விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்த சிறைக்கைதிகள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.