“உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்து ஆர்.என்.ரவி பயந்து விட்டார்” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

“உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்து ஆர்.என்.ரவி பயந்து விட்டார்” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
Puducherry Ex CM Narayanasamy: தமிழிசையை எதிர்த்தால் நாற்காலி காலியாகும் என்ற பயத்தில் இருக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து உத்தரவுகளையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டு, சூப்பர் முதலமைச்சராக செயல்படுகிறார், இதை எதிர்த்து பேசினால் நாற்காலி காலியாகும் என முதலமைசர் ரங்கசாமி மவுனமாக இருக்கிறார் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (நவ.18) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். இதுதான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதன் மூலம் பாஜகவும், மோடியும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய உடனே, 10 கோப்புகளை ஆளுநர் ரவி உச்ச நீதிமன்ற உத்தரவைப் பார்த்து பயந்து சுய கவுரவத்தை பாதுகாத்துக் கொள்ள, தமிழக அரசு சார்பில் வைத்திருந்த கோப்புகளை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.
வில்லியனூர் பெண் காவலர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. பெண்ணின் தந்தை கொடுத்த புகாரை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். காரணம், பெண் காவலர் சாவில் வில்லியனூர் போலீசாருக்கு தொடர்பு உள்ளது. இதனை
மறைக்க கணவர் மீது பொய் புகார் கூறி கைது செய்துள்ளனர். எனவே, காவல் துறைத் தலைவர் நேரடியாக விசாரிக்க வேண்டும்.
புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அனைத்து உத்தரவுகளையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டு, சூப்பர் சி.எம்-ஆக செயல்படுகிறார். எதிர்த்துப் பேசினால் நாற்காலி காலியாகும் என முதல்வர் ரங்கசாமி மவுனமாக இருக்கிறார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலை விபத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், விபத்து குறித்து முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. பல முறைகேடுகள் இந்த தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. சாசன் நிறுவனத்திற்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகிறது” என தெரிவித்தார்.
