ETV Bharat / bharat

வருமானவரி சோதனைக்கு திமுக அஞ்சாது; எதிர்த்து நிற்கும் - நாராயணசாமி

author img

By

Published : Apr 2, 2021, 11:00 PM IST

புதுச்சேரி: வருமானவரி சோதனைக்கு திமுக அஞ்சாது, எதிர்த்து நிற்கும் என்றும்; மோடி, அமித்ஷாவின் பகல் கனவு பலிக்காது என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நராயணசாமி
நராயணசாமி

சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ''திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. தோல்வி பயத்தால் பாஜக, வருமான வரித்துறையை ஏவி விட்டு, ஸ்டாலின் குடும்பத்துக்கு களங்கம் விளைவித்து, மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பவே இந்தச் சோதனையை நடத்துகிறது.

நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

பாஜக எதிர்க்கட்சிகளைத் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்க தேர்தல் நேரத்தில் இந்த வேலையை செய்கிறார்கள்.

இது பாஜகவுக்கு கைவந்த கலை. ஸ்டாலினின் மகள் வீட்டில் சோதனை செய்ததை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தல் நெருக்கமான நேரத்தில் நடக்கும் இந்தச் சோதனையின் உள்நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரியும்.

பல சோதனைகளை திமுக கண்டுள்ளது. அவர்கள் அஞ்சப்போவதில்லை. எதிர்த்து நிற்பார்கள். நீதி, நியாயம் வெல்லும். திமுக கூட்டணி வெல்லும். ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். பழிவாங்கும் நடவடிக்கையை மோடியும், அமித் ஷாவும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிகார துஷ்பிரயோகத்தை தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள். அடுத்து திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும், களங்கம் விளைவிக்கவுமே இதை செய்கிறார்கள். மோடி, அமித்ஷா பகல் கனவு பலிக்காது'' என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.