ETV Bharat / bharat

பாஜகவுக்கு கல்லறை தோண்ட காங்கிரஸ் கனவு காண்கிறது: பிரதமர் மோடி

author img

By

Published : Mar 12, 2023, 9:15 PM IST

பாஜகவுக்கும், எனக்கும் கல்லறையை தோண்டுவதற்காக காங்கிரஸ் கனவு காண்கிறது என்றும், ஆனால் காங்கிரசின் திட்டம் பலிக்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM
PM

கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று(மார்ச்.12) கர்நாடகாவுக்கு சென்றார். பிரதமரின் வருகையையொட்டி மைசூர், மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பெங்களூர் - மைசூர் விரைவுச் சாலையை திறந்து வைப்பதற்காக மாண்டியா வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் நின்றபடி கையசைத்துக் கொண்டே வந்த பிரதமருக்கு, இருபுறமும் நின்றிருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் பிரதமர் மோடியும் மக்கள் மீது மலர்களை வீசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரதமரின் வருகையையொட்டி நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பின்னர், 8,480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூர் - மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பெங்களூர் - நிடகட்டா - மைசூர் இடையே 118 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "2014ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் அரசு மக்களின் மேம்பாட்டுக்கான நிதியை கொள்ளையடித்தது. அதன் பிறகுதான் மக்களுக்கான பாஜக அரசு அமைந்தது. இப்போது பாஜக அரசு பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலை போன்ற திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்து வரும் இந்த சூழலில், மோடிக்கும் பாஜகவுக்கும் கல்லறையை தோண்டுவதற்காக காங்கிரஸ் கனவு காண்கிறது. ஆனால், காங்கிரசின் திட்டம் பலிக்காது, கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதமே எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாகும். கர்நாடகாவின் நிலையான வளர்ச்சிக்கு, மக்கள் இரட்டை எஞ்சின் பாஜக அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று கூறினார்.

கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே பாஜக தலைவர்கள் கர்நாடகாவுக்கு படையெடுத்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் பல பாஜக தலைவர்கள் கர்நாடகாவுக்கு சென்று வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு மாதங்களில் 5 முறை கர்நாடகாவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. தென்னிந்தியாவில் காலூன்ற பாஜக முயற்சித்து வரும் நிலையில், கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் மாநிலக் கட்சிகளே ஆட்சியில் உள்ளன. அதனால், கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்கிறது.

இதையும் படிங்க: "இந்தியாவை வெறுத்துவிட முடியாது" - பாலியல் தொல்லைக்கு ஆளான ஜப்பான் இளம்பெண் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.