ETV Bharat / bharat

உத்தரகாசி சுரங்க விபத்து; மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்த பிரதமர்!

author img

By ANI

Published : Nov 29, 2023, 9:19 AM IST

Updated : Nov 29, 2023, 11:59 AM IST

PM Modi speaks to workers rescued: உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களிடம், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் அழைத்து நலம் விசாரித்தார்.

PM Modi speaks to workers rescued from Silkyara tunnel
பிரதமர் மோடி

உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் நடந்து வந்த சில்க்யரா சுரங்கப் பணியின்போது, கடந்த நவம்பர் 12ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்தில் சுமார் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று முந்தினம் (நவ.27) மீட்புப் பணியின்போது இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று (நவ.28) இரவு 8 மணிக்கு மேல் மீட்புப் பணி தொடங்கிய நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சுரங்கத்திற்குள் சென்று ஓவ்வொரு தொழிலாளர்களாக வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் முதற்கட்டமாக 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. தற்போது அனைவரும் சமூக நல மையத்தில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சுரங்கப்பாதைப் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணியாளர்களின் உறுதியையும், துணிச்சலையும் பாராட்டினர். சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் பாதுகாப்பாக வெளியேறிய தொழிலாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் அழைத்து பேசி வாழ்த்துகளையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “கடந்த 16 நாட்களாக நடந்த இந்த மீட்புப் பணியானது மனித நேயம் மற்றும் குழுவாக இணைந்து பணியாற்றியதற்கு ஒரு எடுத்துக்காட்டு. உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாள சகோதரர்கள் மீட்புப்பணி வெற்றியடைந்தது, அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

சுரங்கப் பாதையில் சிக்கித் தவித்த தொழிலாளர்களின் தைரியமும், பொறுமையும் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாவும் வாழ எனது வாழ்த்துக்கள். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அன்புக்குரிய அனைவரையும் சந்திப்பது மிகவும் திருப்திகரமாக உள்ளது. இந்த சவாலான நேரத்திலும், தொழிலாளர்களின் குடும்பங்கள் காட்டிய பொறுமையையும், தைரியத்தையும் பாராட்ட அளவே கிடையாது" என பதிவிட்டுள்ளார்.

சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்களின் பெயர் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. "ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வஜித் குமார், சுபோத் குமார், ராஜேந்திர பேடியா, சுக்ரம், டிங்கு சர்தார், குணோதர், சமீர், ரவீந்திரா, ரஞ்சீத், மகாதேவ், புக்ட்டு முர்மு, ஜம்ரா ஓரான், விஜய் ஹோரோ, கணபதி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கப்பர் சிங் நேகி மற்றும் புஷ்கர்.

பீகாரைச் சேர்ந்த சபா அகமது, சோனு சா, வீரேந்திர கிஸ்கூ மற்றும் சுஷில் குமார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மணிர் தாலுக்தார், சேவிக் பகேரா மற்றும் ஜெய்தேவ் பர்மானிக், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்அகிலேஷ் குமார், அங்கித், ராம் மிலன், சத்ய தேவ், சந்தோஷ், ஜெய் பிரகாஷ், ராம் சுந்தர் மற்றும் மஞ்சித், ஒடிசாவைச் சேர்ந்த தபன் மண்டல், பகவான் பத்ரா, விசேஷர் நாயக், ராஜு நாயக் மற்றும் தீரன் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் ராம் பிரசாத் அஸ்ஸாம் மற்றும் விஷால்.

இதையும் படிங்க: "சிறுபான்மை மக்களை திமுக தந்திரமாக ஏமாற்றி வருகிறது" - எடப்பாடி பழனிசாமி சாடல்!

Last Updated : Nov 29, 2023, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.