ETV Bharat / bharat

ஃபோன்பே ஸ்மார்ட் ஸ்பீக்கரில் இனி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள்!

author img

By

Published : Aug 8, 2023, 2:03 PM IST

ஃபோன்பே நிறுவனம், தனது டிஜிட்டல் பேமெண்டிற்கான ஸ்மார்ட் ஸ்பீக்கரில் தமிழ், மளையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குரல் கட்டண அறிவிப்பை கொண்டுவந்துள்ளது. விரைவில் மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PhonePe
போன்பே

ஹைதராபாத்: டிஜிட்டல் மயமாகிவரும் உலகில் எல்லாவற்றையும் எளிமையாக சில நொடிகளில் செய்து முடிக்கும் வகையில் ஆன்லைன் சேவைகள் வந்துவிட்டன. இதில் முக்கியமானது ஆன்லைன் பணப் பரிவர்த்தனை. கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் உள்ளிட்ட முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள் இந்த ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் பொதுமக்களிடையே டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்றார்போல், டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள் வணிக நிறுவனங்கள் முதல் சிறிய வியாபாரிகள் வரை அனைத்து வணிகர்களிடமும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளை ஊக்குவிக்கின்றன.

இந்த ஆன்லைன் பேமெண்ட் முறையில், வணிகர்களிடம் இருக்கும் க்யூஆர் கோடு மூலமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எளிதாக செலுத்தலாம். அதேபோல், வாடிக்கையாளர் அனுப்பிய பணம் வந்துவிட்டதா என்பதை சரிபார்க்க வணிகர்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை (Smart Speakers) பயன்படுத்துகின்றனர். அதில், வாடிக்கையாளர் எவ்வளவு பணம் அனுப்பியுள்ளார் என்பதை குரல் அறிவிப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால், பணம் வந்துவிட்டதா? என்பதை அறிந்துகொள்ள செல்போனில் குறுஞ்செய்தியையோ அல்லது வங்கிக் கணக்கையோ சரிபார்க்கத் தேவையில்லை. முதலில் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் ஆங்கிலத்தில் குரல் அறிவிப்பு வந்தது. அதன் பிறகு உள்ளூர் வியாபாரிகளுக்கு ஏதுவாக பிராந்திய மொழிகளிலும் குரல் அறிவிப்பை கொண்டு வர இந்த டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டன. கூகுள்பே ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ஏற்கனவே தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் குரல் அறிவிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஃபோன்பே (PhonePe) நிறுவனம் அதன் டிஜிட்டல் பேமெண்டிற்கான ஸ்மார்ட் ஸ்பீக்கரில் பிராந்திய மொழிகளில் குரல் அறிவிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக தமிழ், மளையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கான குரல் கட்டண அறிவிப்பை கொண்டுவந்துள்ளது. மராத்தி உள்ளிட்ட மேலும் சில பிராந்திய மொழிகளிலும் குரல் கட்டண அறிவிப்பை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஃபோன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் வணிகர்கள் தங்களது மொழியில் வாடிக்கையாளர்களின் கட்டணங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

வணிகர்கள் எந்தவித கூடுதல் கட்டணங்களும் இன்றி இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் தங்களது வணிகப் பயன்பாட்டிற்கான ஃபோன்பே செயலியில் (PhonePe for Business) சென்று ஸ்மார்ட் ஸ்பீக்கர் பகுதியில் தங்களது வட்டார மொழியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஃபோன்பே நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோன்பே, 47 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் கேட்ஜெட்ஸ் இறக்குமதிக்கான தடை தற்காலிக நீக்கம் - மத்திய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.