ETV Bharat / bharat

ஆக்சிஜன் மாஸ்க் தீப்பிடித்து நோயாளி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - ராஜஸ்தானில் நடந்தது என்ன?

author img

By

Published : Jul 14, 2023, 2:03 PM IST

ராஜஸ்தானில் உள்ள கோட்டா மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் மாஸ்க் தீப்பிடித்து எரிந்ததால் நோயாளி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

கோட்டா: ராஜஸ்தானில் உள்ள கோட்டா மருத்துவக் கல்லூரியில் நேற்றைய முன்தினம் (ஜூலை 12) இரவு குறைந்த மின்னழுத்தம் (short circuit) காரணமாக ஆக்ஸிஜன் மாஸ்க் தீப்பிடித்து எரிந்ததில் அனந்தபுராவைச் சேர்ந்த வைபவ் சர்மா என்பவர் உடல் கருகி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

உயிரிழந்த வைபவ் சர்மா குடல் வெடிப்பு காரணமாக ஐந்து நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வைபவ் சர்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஜூலை 12ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வைபவ் சர்மாவின் உடல் நிலை மோசமடைந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் கொடுத்து உயிர்ப்பிக்க முயன்றுள்ளனர். சிபிஆர் சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சுவிட்ச் போர்டு தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும், வைபவ் சர்மா அணிந்திருந்த ஆக்ஸிஜன் முகக்கவசம் சுவிட்ச் போர்டுடன் இணைக்கப்பட்டிருந்ததால் ஆக்ஸிஜன் முகக்கவசத்திலும் தீ பரவியதாகவும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வைபவ் சர்மா உடல் கருகி உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வைபவ் சர்மா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த நிலையில், வைபவ் சர்மாவின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மறுபுறம் உயிரிழந்த வைபவ் சர்மாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று (ஜூலை 13) மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, உயிரிழந்த நபரின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் கூடினர். மேலும், வைபவ் சர்மாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிராமணர் நல மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அனில் திவாரி கூறினார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சங்கீதா சக்சேனா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பீகாரில் போலீஸ் தடியடியில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு - பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.