ETV Bharat / bharat

டெல்லியில் பிரதமர் மோடி - நேபாள பிரதமர் பிரசந்தா சந்திப்பு!

author img

By

Published : Jun 1, 2023, 1:39 PM IST

Updated : Jun 1, 2023, 1:54 PM IST

4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பிரசந்தா உடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி - நேபாள பிரதமர் பிரச்சண்டா சந்திப்பு
பிரதமர் மோடி - நேபாள பிரதமர் பிரச்சண்டா சந்திப்பு

டெல்லி: நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா, 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இதற்காக நேற்று (மே 31) டெல்லி வந்த நேபாள பிரதமர் புஷ்ப பிரசந்தாவை, மத்திய அமைச்சர் மீனாக்‌ஷி லேகி வரவேற்றார். இதனையடுத்து அவர், டெல்லியில் உள்ள ராஜ் காத்தில் மலர் வளையம் வைத்து இன்று (ஜூன் 1) மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கு இருந்த பார்வையாளர் புத்தகத்தில் தனது அனுபவத்தை வார்த்தைகளில் பகிர்ந்தார். அது மட்டுமல்லாமல், ராஜ் காத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், ஹைதராபாத் இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி உடன் நேபாள பிரதமர் புஷ்ப பிரசந்தா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்தியா - நேபாளம் இடையிலான நல்லுறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நேபாள பிரதமராக பதவி ஏற்ற புஷ்ப பிரசந்தா, முதன் முறையாக இந்தியாவிற்கே வெளிநாட்டு சுற்றுப் பயணமாக வந்துள்ளார்.

இந்த இந்தியப் பயணம் அவருக்கு 4வது பயணம் ஆகும். மேலும், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நட்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான பிணைப்பு இருவரிடமும் ஆழமாக உள்ளது.

பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ஹைதராபாத் இல்லத்துக்கு வந்த நேபாள பிரதமர் புஷ்ப பிரசந்தாவை பிரதமர் மோடி வரவேற்றார். ராஜ் காத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு நேபாள பிரதமர் மரியாதை செலுத்தினார். முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணமாக டெல்லி வந்த நேபாள பிரதமர் பிரசந்தாவை மத்திய அமைச்சர் மீனாக்‌ஷி லேகி வரவேற்றார்.

இந்த பயணத்தின்போது இந்தியா - நேபாளம் இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லுறவு புதுப்பிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பிரசந்தா, அரசு முறை சந்திப்புகள் மட்டுமல்லாமல், உஜ்ஜைன் மற்றும் இந்தூருக்கு செல்ல உள்ளார்.

அதேநேரம், இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் நேபாள பிரதமர் சந்திக்க உள்ளார். முன்னதாக, பிரதமர் தூபா கடந்த ஏப்ரல் 2022இல் டெல்லிக்கு வந்தபோதும், கடந்த 2022 மே மாதத்தில் பிரதமர் மோடி லும்பினி சென்ற போதும், இந்தியா - நேபாளம் இடையிலான நல்லுறவு அதிக அளவில் வெற்றிகரமான சாதனைகளை இரு நாட்டிலும் நிகழ்த்தி உள்ளது.

மேலும், இந்தியாவுக்கான நேபாள தூதர் ஷங்கர் பி ஷர்மா, “நேபாள பிரதமரின் இந்திய பயணம், ஒரு நல்ல முறை பயணம் ஆகும். இதன் மூலம் இந்தியா - நேபாளம் இடையிலான உறவு அதிக உயரத்தை அடைய உள்ளது” என நேற்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து பிரதமரும் இந்தியர்... பர்மிங்காம் மேயரும் இந்தியர்... இது எப்படி இருக்கு!

Last Updated : Jun 1, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.