ETV Bharat / bharat

நேபாளில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து; 8 பேர் உயிரிழப்பு - மீட்புப்பணிகள் தீவிரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 7:49 PM IST

நேபால் காத்மண்டுவில் இருந்து பொக்காராவிற்கு சென்று கொண்டிருந்த பேருந்து, ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாலில் நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்து பேருந்து
நேபாலில் நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்து பேருந்து

காத்மாண்டு (நேபாளம்): நேபாளம் காத்மண்டுவில் இருந்து பொக்காராவிற்கு சென்று கொண்டிருந்த பேருந்து, இன்று (ஆகஸ்ட் 23) திடீரென அதன் வழித்தடத்தில் இருந்து மாறி, அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேபாளில் மலை, காடுகள் என எழில் கொஞ்சும் பசுமை உடன் இருக்கக் கூடிய இடங்களில் பொக்காரவும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளது. அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் இது கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காத்மண்டுவில் இருந்து பொக்காராவிற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

காத்மண்டுவில் இருந்து பொக்காராவிற்கு வழக்கமாக இயக்கப்படும் பாதையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. முன்னதாக பெய்த மழையினாலும், சாலையில் நிலவிய ஈரத்தன்மையினாலும் பேருந்து அதன் கட்டுபாட்டை இழந்து தாடிங் மாகாணம் சாலிஸில் மாவட்டத்தில் உள்ள திரிசூலி நதியில் கவிழ்ந்தது.

இதையும் படிங்க: மிசோரம் ரயில்வே பாலம் விபத்து; 17 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

இந்த கோரச் சம்பவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்மாநிலத்தின் பாதுகாப்பு படை மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இது குறித்து தாடிங் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்துலால் பிரசாத் ஜெய்ஸ்வர் கூறுகையில், "கடும் மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகள் வலுவிழந்ததால் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து உள்ளது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோரச் சம்பவம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. கடும் மழையினால் ஆற்றில் கூடுதலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பேருந்து முழுவதுமாக மூழ்கப்பட்டுள்ளது. இது வரையில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலை சூழ்ந்த பகுதிகளில் கடும் மழைப் பொழிவினால் நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால், இந்த விபத்துகளுக்கு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், ஓட்டுநர்களின் கவனக்குறைபாடு என்றே காரணங்கள் திருப்பப்படுவது ஏற்புடையதல்ல" என தெரிவித்து உள்ளார். மேலும், இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.