ETV Bharat / bharat

சந்திரயான்-3 திட்டத்தில் நாமக்கல் மண்ணின் பங்களிப்பு... புவியியல் நிபுணர் கூறிய சுவாரசிய தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 12:03 PM IST

Updated : Aug 23, 2023, 12:10 PM IST

Namakkal soil in Chandrayaan-3 mission: சந்திரயான்-3 விண்கலத்தின் ஆராய்ச்சிக்காக தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் மண்ணை இஸ்ரோ பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திரயான்-3 திட்டத்தில் நாமக்கல் மண்ணின் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Not only
சந்திராயன்3

சென்னை: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் இந்த விண்கலம் நுழைந்த நிலையில், அதன் பிறகு படிப்படியாக சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. தற்போது நிலவுக்கு மிகவும் நெருக்கமான சுற்றுப்பாதையில் லேண்டர் உள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டருக்கும், சந்திரயான்-2ன் ஆர்பிட்டருக்கும் இடையே வெற்றிகரமாக தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சந்திரயான்-3 திட்டத்திற்கான பரிசோதனையில் நாமக்கல் மாவட்டத்தின் மண்ணை இஸ்ரோ பயன்படுத்தி உள்ளதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. தகவலின்படி, சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்குவதற்கான பயிற்சிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சியின் போது ஆய்வுக் கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை, மண் ஆகியவற்றை ஏற்படுத்தி, அதில் லேண்டர், ரோவரை தரையிறக்க திட்டமிடப்பட்டது. இந்த சூழலில் நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் இருக்கும் மண்ணைப் போலவே, நாமக்கல் மாவட்டத்தில் இருப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து, நாமக்கலில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு இஸ்ரோ மையத்தில் லேண்டர், ரோவரை தரையிறக்கும் பயிற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இயக்குனர் அன்பழகன் கூறும்போது, "நாங்கள் புவியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். நிலவின் மேற்பரப்பில் இருப்பது போன்ற மண் வகை தமிழ்நாட்டில் உள்ளது.

குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் இருப்பது போன்ற அனோர்தோசைட் வகை மண், நாமக்கல்லில் உள்ளது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, நாமக்கல் பகுதியில் கிடைக்கும் மண், சந்திரனின் மேற்பரப்பில் இருக்கும் மண்ணுடன் ஒத்துப்போவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

இந்த அனோர்தோசைட் வகை மண் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி, குன்னமலை போன்ற கிராமங்களில் உள்ளது. அதேபோல், ஆந்திராவிலும் ஒரு சில பகுதிகளில் இந்த வகை மண் அதிகளவில் உள்ளது. இஸ்ரோவின் ஆய்வுக்காக, சுமார் 50 டன் மண்ணை நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் தேவைக்கு ஏற்ப மண்ணை அனுப்பி வருகிறோம். எதிர்காலத்தில் சந்திரயான்-4 திட்டம் வந்தாலும், அதற்காக நாங்கள் மண்ணை வழங்க தயாராக இருக்கிறோம்" என்றார். சந்திரயான் உள்பட இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் பணியாற்றியுள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம், சந்திரயான்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட தமிழர்கள் இஸ்ரோ திட்டங்களில் பங்காற்றியுள்ள நிலையில், மற்றொரு பெருமையாக தமிழ்நாட்டின் மண்ணும் இஸ்ரோ பணிகளுக்கு பங்காற்றி உள்ளது.

இதையும் படிங்க: சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் காண இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!

Last Updated : Aug 23, 2023, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.